காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் வாக்கு சேகரிப்பு “படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுத்தருவேன்” என பிரசாரம்

களக்காடு பகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் நேற்று வாக்கு சேகரித்தார். படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுத்தருவேன் என அவர் பிரசாரம் செய்தார்.

Update: 2019-10-08 22:30 GMT
களக்காடு, 

நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் நேற்று காலை கன்னியாகுமரி சாமிதோப்புக்கு சென்றார். அங்கு அய்யா வழி நிறுவன தலைவர் பாலபிரஜாபதி அடிகளாரை நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.

அப்போது பாலபிரஜாபதி அடிகளார் கூறுகையில், “ஒவ்வொருவரும் ஒவ்வொரு மதத்தை கடைபிடிக்கலாம். காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் கிறிஸ்தவராக இருந்தாலும் அய்யா வழியை சேர்ந்தவர். அவருக்கு ஆசி வழங்கினேன்” என்றார்.

அதனை தொடர்ந்து வேட்பாளர் ரூபி மனோகரன் களக்காடு பஸ்நிலையம் அண்ணா சிலை முன்பு கை சின்னத்துக்கு ஓட்டு கேட்டு பிரசாரத்தை தொடங்கினார். வியாசபுரம், காந்தி வீதி, பெரிய தெரு, புதுத்தெரு, சிதம்பராபுரம், மூங்கிலடி, ஜவகர்வீதி, நடுத்தெரு, சன்னதி தெரு, கலுங்கடி, மேலபத்தை, அம்பேத்கர்நகர், மஞ்சுவிளை, கீழபத்தை, மேலகருவேன்குளம், கீழகருவேலன்குளம், வடமலைசமுத்திரம், தம்பித்தோப்பு, சிங்கம்பத்து, நாகன்குளம், கோவில்பத்து, காமராஜர் சிலை பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார்.

பிரசாரத்தின்போது வேட்பாளர் ரூபி மனோகரன் பேசியதாவது:–

நாங்குநேரி தொகுதி மக்களை முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்வதே எனது தலையாய பணியாகும். தொகுதியில் உள்ள விவசாயிகளுக்கு நவீன யுக்தியுடன் விவசாயம் வளர்ச்சி பெறுவதற்கு நான் பாடுபடுவேன். நான் தொழில் அதிபர் என்பதால் ஏராளமான தொழில் முனைவர்களுடன் தொடர்பு உண்டு.

அப்படிப்பட்ட தொழில் முனைவர்களை நாங்குநேரிக்கு அழைத்து வந்து தொழில் தொடங்க பாடுபடுவேன். மேலும் படித்த இளைஞர்களுக்கு தொழில் முனைவர்களுடன் பேசி வேலைவாய்ப்பு பெற்றுத் தருவேன். கலைஞர் தொடங்கி வைத்த தொழில்நுட்ப பூங்கா அ.தி.மு.க. ஆட்சியில் செயல்படாமலேயே உள்ளது. நான் வெற்றி பெற்றால் வரக்கூடிய ஆட்சியில் ஸ்டாலினிடம் பேசி தொழில்நுட்ப பூங்காவை செயல்பட வைப்பேன். தொடர்ந்து தொகுதியில் இருந்து மக்களுக்காக பாடுபடுவேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

பிரசாரத்தில் காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் எஸ்.கே.எம்.சிவகுமார், பழனி நாடார், தி.மு.க. நகர செயலாளர் பி.சி.ராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

களக்காடு பகுதிகளில் வசந்தகுமார் எம்.பி. பொதுமக்கள், கடை வியாபாரிகளிடம் துண்டுபிரசுரங்கள் வழங்கி வாக்கு சேகரித்தார்.

இந்நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், ராஜேஷ், முன்னாள் மாவட்ட தலைவர் தமிழ்செல்வன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்