“காங்கிரஸ் வக்கீல் அணியினர் துணிச்சலுடன் பணியாற்ற வேண்டும்” திருநாவுக்கரசர் எம்.பி. அறிவுறுத்தல்

“காங்கிரஸ் வக்கீல் அணியினர் துணிச்சலுடன் பணியாற்ற வேண்டும்“ என்று திருநாவுக்கரசர் எம்.பி. கூறினார்.

Update: 2019-10-06 22:00 GMT
நெல்லை, 

“காங்கிரஸ் வக்கீல் அணியினர் துணிச்சலுடன் பணியாற்ற வேண்டும்“ என்று திருநாவுக்கரசர் எம்.பி. கூறினார்.

ஆலோசனை கூட்டம்

நெல்லை மாவட்ட காங்கிரஸ் வக்கீல் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நெல்லையில் நேற்று நடந்தது. மாவட்ட வக்கீல் அணி தலைவர் சிவனுபாண்டியன் தலைமை தாங்கினார். தகவல் அறியும் உரிமை பிரிவு மாநில துணை தலைவர் வக்கீல் பால்ராஜ் முன்னிலை வகித்தார். முன்னாள் மாநில தலைவர் திருநாவுக்கரசர் எம்.பி. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

நான் வக்கீலுக்கு படித்ததால் தான் அரசியலுக்கு வர முடிந்தது. காங்கிரஸ் வக்கீல் அணியினர் துணிச்சலோடு கட்சி பணியாற்றவேண்டும். நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர் ரூபி மனோகரன், உழைப்பால் உயர்ந்தவர். அவர் மக்கள் சேவை செய்ய வேண்டும் என்பதற்காக அரசியலுக்கு வந்து உள்ளார். அவரை இங்குள்ள அ.தி.மு.க.வினர் சென்னைகாரர் என்று கூறி விமர்சனம் செய்கிறார்கள். அவர் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர். அவருடைய வெற்றிக்காக அனைவரும் அயராது உழைக்க வேண்டும்.

சட்டசபை பொது தேர்தலுக்கு...

ரூபி மனோகரன் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். இதற்காக அனைவரும் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்க வேண்டும்.

இந்த தேர்தல் அடுத்து வருகின்ற சட்டசபை பொது தேர்தலுக்கு முதல் வெற்றிபடியாகும். சட்டசபை பொது தேர்தலிலும் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி தொடரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன், மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன், பொது செயலாளர் சொக்கலிங்ககுமார், பொருளாளர் ராஜேஷ்முருகன், ஆலடிசங்கரைய்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்