தேவூர் பகுதியில் கனமழை: 1,500 வாழை மரங்கள் அடியோடு சாய்ந்தன - நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

தேவூர் பகுதியில் பெய்த கனமழைக்கு 1,500 வாழை மரங்கள் அடியோடு சாய்ந்தன. நாசமடைந்த வாழைகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2019-10-05 22:00 GMT
தேவூர், 

சேலம் மாவட்டம் தேவூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் சரபங்கா நதியில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் தேவூர் சரபங்கா நதி தடுப்பணை பகுதியில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு, பொதுமக்கள் அப்பகுதிக்கு செல்லக்கூடாது எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

மேலும் இந்த கனமழையால் காவேரிப்பட்டி, ரெட்டிபாளையம் பகுதிகளில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.

இதேபோல தேவூர் பேரூராட்சி கானியாளம்பட்டி, பூச்சக்காடு பகுதிகளில் விவசாயிகளுக்கு சொந்தமான விவசாய நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டிருந்த சுமார் 1,500 வாழை மரங்கள் கனமழையால் அடியோடு சாய்ந்து நாசமானது.

இதையடுத்து தேவூர் கிராம நிர்வாக அலுவலர் ஸ்ரீதர், தேவூர் வருவாய் ஆய்வாளர் முனிசிவ பெருமாள் மற்றும் வேளாண்மை துறை அதிகாரிகள் நேரில் சென்று நாசமடைந்த வாழைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது விவசாயிகள் நாசமடைந்த தங்களது வாழைகளுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர்.

மேலும் செய்திகள்