கிருஷ்ணகிரி அருகே, 700 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டு கண்டுபிடிப்பு

கிருஷ்ணகிரி அருகே 700 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Update: 2019-10-05 22:00 GMT
கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு, மாவட்ட அருங்காட்சியகத்துடன் இணைந்து தொடர்ந்து பல்வேறு இடங்களை கள ஆய்வு செய்துவருகிறது. வரலாற்று ஆய்வாளர் சதாநந்த கிருஷ்ணகுமார் அளித்த தகவலின் பேரில் தலைவர் நாராயணமூர்த்தி மற்றும் காப்பாட்சியர் கோவிந்தராஜ் ஆகியோர் கிருஷ்ணகிரி அருகே பந்திகுறி பகுதியில் உள்ள சுமார் 700 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்வெட்டை கண்டறிந்தனர் .

இந்த கல்வெட்டு குறித்து அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது:- பந்திகுறியில் உள்ள பாறையில் 10 வரிகளை கொண்ட இந்த நீண்ட கல்வெட்டு காணப்படுகிறது. வீரவல்லாளனின் மகன் விருதுகோவன் இலக்குமி நாயக்கர் இப்பகுதியை ஆண்டபோது அவரது ஆட்சி சிறக்கவேண்டி குந்தாணியில் உள்ள ஏகாம்பரநாதர் கோவிலுக்கு பந்திகுறியில் உள்ள நிலத்தை தானமாக அளித்த செய்தியை இக்கல்வெட்டு தெரிவிக்கிறது.


இந்த கல்வெட்டு இரண்டு முக்கிய வரலாற்று செய்திகளை தெரிவிக்கிறது. முதலாவதாக சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்னர் பந்திகுறி என்று தற்போது அழைக்கப்படும் இந்த ஊர் பன்றிகுறுக்கி என்று அழைக்கப்பட்டதாக இக்கல்வெட்டு வாயிலாக தெரியவருகிறது. மேலும் ஒய்சாள மன்னன் வீரவல்லாளனின் பெயர் இக்கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. மூன்றாம் வீரவல்லாளன் கி.பி.1343-ல் கொல்லப்பட்டதாகவும் அதன்பின் அவரது மகன் மூன்று ஆண்டுகள் அரசாண்டதாகவும் வரலாறு கூறுகிறது. அவனுக்குப் பின் விஜயநகர அரசோடு இணைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் கி.பி.1368-ம் ஆண்டை சேர்ந்த பந்திகுறி கல்வெட்டு வீரவல்லாளனின் மகன் பெயர் விருதுகோவன் இலக்குமிநாயக்கர் என்றும் இவரது வாளும் தோளும் நன்றாக இருக்கவேண்டி தானம் அளித்த செய்தியை குறிப்பிடுகிறது. எனவே இக்கல்வெட்டு வாயிலாக ஒய்சாள வம்சமானது முடிவுற்ற பின்னும் தொடர்ந்து குறுநிலத்தலைவர்களாக விஜய நகர ஆட்சிக்காலத்திலும் இப்பகுதியை ஆண்டு வந்துள்ளது தெரிய வருகிறது.

மேலும் வீரவல்லாளன் என்ற பெயரில் சுமார் 150 ஆண்டுகள் கழித்து விஜயநகரப் பேரரசின் இறுதிக் காலத்தில் இப்பகுதியை ஆண்டதாக முறையே கி.பி.1505-ம் ஆண்டை சேர்ந்த நெடுசால் கல்வெட்டு மற்றும் 1511-ல் வெட்டப்பட்ட கொத்தூர் கல்வெட்டு ஆகிய இரண்டு கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன.

எனவே, இது குறித்து மேலும் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது மதிவாணன், டேவிஸ், கணேசன், அருங்காட்சியக செல்வகுமார், ஒருங்கிணைப்பாளர் தமிழ் செல்வன் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்