பனைக்குளம் மின் அலுவலகத்தில் ஊழியர் பற்றாக்குறை; பொதுமக்கள் அவதி

பனைக்குளம் மின் அலுவலகத்தில் ஊழியர்கள் பற்றாக்குறையால் பழுதுகளை உடனுக்குடன் சரி செய்ய முடியாத நிலையில் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

Update: 2019-10-05 22:45 GMT
பனைக்குளம்,

மண்டபம் யூனியன், பனைக்குளம் மின்துறை அலுவலகத்திற்கு உட்பட்டு கோப்பேரிமடம், சித்தார்கோட்டை, அத்தியூத்து, புதுவலசை, பனைக்குளம், அழகன்குளம், ஆற்றாங்கரை உள்பட 7 ஊராட்சிகள் உள்ளன. இந்த அலுவலகத்தின் கீழ் சுமார் 13,000 மின் இணைப்புகளும், 84 டிரான்ஸ்பார்மர்களும் உள்ளன. இங்கு நிரந்தர லைன்மேன்கள் 7 பேர் பணியில் இருக்க வேண்டும். ஆனால் தற்போது நிரந்தர பணியில் ஒருவர் கூட இல்லை. இதனால் இந்த பகுதியில் ஏற்படும் மின் பழுதுகளை உடனுக்குடன் சரி செய்ய முடியாத நிலை இருந்து வருகிறது.

தற்போது மழைக்காலம் தொடங்கி உள்ளதாலும், பலத்த காற்று காரணமாகவும் அவ்வப்போது மின்தடை ஏற்படுகிறது. லைன்மேன்கள் இல்லாததால் டிரான்ஸ்பார்மர் களில் ஏற்படும் பழுதுகள், அறுந்து விழும் மின் கம்பிகள் ஆகியவற்றை சரி செய்வதற்கு காலதாமதம் ஏற்படுகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் மின்சாரம் இல்லாமல் இரவு பகலாக அவதிப்படும் நிலை தொடர்கதையாகி வருகிறது.

மேலும் தெருக்களில் மின் கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கிறது. கடற்கரை பகுதியான ஆற்றாங்கரை, அழகன்குளம், அத்தியூத்து, சித்தார்கோட்டை போன்ற பகுதிகளில் பல ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட கான்கிரீட் மின் கம்பங்கள் சேதமடைந்து மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளன. இது குறித்து பல முறை சுட்டிக்காட்டியும் மின்வாரிய அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மேலும் பொதுமக்கள் சார்பில் உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்றும் ஊழியர்கள் நியமிக்கப்படவில்லை எனவும், பழுதடைந்த மின்கம்பங்கள் மாற்றப்படவில்லை எனவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே பனைக்குளம் மின் அலுவலகத்தில் பற்றாக்குறையாக உள்ள லைன்மேன் உள்ளிட்ட ஊழியர் பணியிடங்களை உடனடியாக நிரப்பவும், பழுதடைந்த மின் கம்பங்களை மாற்றவும் தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்