காமராஜ் நகர் இடைத்தேர்தல்: முதல்-அமைச்சர் நாராயணசாமி தேர்தல் பிரசாரம்

காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் முதல்-அமைச்சர் நாராயணசாமி தேர்தல் பிரசாரம் செய்தார்.

Update: 2019-10-04 23:00 GMT
புதுச்சேரி,

புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஜான்குமார் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக முதல்-அமைச்சர் நாராயணசாமி, கட்சியின் மாநில தலைவர் நமச்சிவாயம் ஆகியோர் தேர்தல் பிரசாரம் தொடங்கினர். முன்னதாக நேற்று காலை சாரம் சுப்ரமணியசாமி கோவிலில் சிறப்பு தரிசனம் செய்தனர்.

பின்னர் அங்கிருந்து வீடு, வீடாக சென்று வாக்கு சேகரித்தனர். அப்போது வைத்திலிங்கம் எம்.பி., தி.மு.க. வடக்கு மாநில தலைவர் எஸ்.பி.சிவக்குமார், வேட்பாளர் ஜான்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சி தலைவர்கள் பலர் உடனிருந்தனர். பிரசாரத்தின் போது முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் பிரசாரத்தை தொடங்கியுள்ளோம். மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. கவர்னர் கிரண்பெடி மக்கள் நலத்திட்டங்களை தடுத்து முட்டுக்கடை போடுகிறார். இது மக்களுக்கு நன்றாக தெரிகிறது. முதியோர் உதவித்தொகை, சென்டாக் உதவித்தொகை, பஞ்சாலைகளுக்கு வழங்க வேண்டிய நிதி, இலவச-வேட்டி சேலை வழங்க ஒதுக்கிய நிதியை கவர்னர் தடுத்து நிறுத்தினார். கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கு ஒதுக்கிய நிதியை தர மறுக்கிறார்.

எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி புதுச்சேரி மக்கள் பிரச்சினைகளை பற்றி எந்த கவலையும் படாதவர். சட்டமன்றத்திற்கு வந்து குரல் கொடுக்காதவர். எனவே அவர் காங்கிரஸ் அரசையும், ஆட்சியாளர்களைப் பற்றியும் குறை கூறக்கூடாது. இலவச அரிசி விவகாரம் தொடர்பாக அவர் ஏன் எந்த கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் செயலை கவர்னர் தடுப்பது தொடர்பாகவும் கருத்து தெரிவிக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் அமைச்சர் நமச்சிவாயம் கூறியதாவது:-

அரசின் செயல்பாடுகள் மாநிலத்தில் ஒன்றும் இல்லை என எதிர்க்கட்சிகள் சொல்லத்தான் செய்வார்கள். அது அவர்களது வேலை. ஆனால் கடந்த நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போதும் இதைக்கூறித்தான் வாக்கு சேகரித்தனர். ஆனால் தேர்தலில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தனர். மேலும் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதற்கான தொடர்ந்து ஆட்சி மாற்றம் என்ற கருத்தையும் எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன. எதிர்க்கட்சிகளின் பொய் பிரசாரத்தை மக்கள் ஏற்க மாட்டார்கள். 5 ஆண்டுகளை காங்கிரஸ் ஆட்சி பூர்த்தி செய்யும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்