மதுரை சுங்கச்சாவடியில் துப்பாக்கிச்சூடு வழக்கில் கைதானவரிடம் சட்டப்படிப்புக்கான கல்விக்கட்டணம் பெறவேண்டும்; ஜாமீனும் வழங்கி மதுரை ஐகோர்ட்டு அனுமதி

சுங்கச்சாவடியில் துப்பாக்கிச்சூடு வழக்கில் கைதானவரிடம் சட்டப்படிப்புக்கான கல்விக்கட்டணம் பெற வேண்டும் என்றும், அவருக்கு ஜாமீன் வழங்கியும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2019-10-04 23:00 GMT
மதுரை,

திருச்சியை சேர்ந்த கணேசன் மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- எனது மகன் கார்த்திகேயன் (வயது 25). தனது நண்பர்கள் சிலருடன் நெல்லைக்கு சென்றுவிட்டு காரில் திரும்பினார். அப்போது மதுரை அருகே கப்பலூர் சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்துவது தொடர்பாக அவர்களுக்கும், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுடப்பட்டது. இதையடுத்து கார்த்திகேயன் கோர்ட்டில் சரணடைந்தார். அவர் உள்பட 6 பேர் மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர்.

முன்னதாக இவர் சட்டப்படிப்புக்காக அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் விண்ணப்பித்து இருந்தார். சிறையில் இருந்ததால் அவருக்கு பதில் அவருடைய தந்தையான நான், சட்டப்படிப்பு கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்க உத்தரவிடக்கோரி வழக்கு தொடரப்பட்டது. பின்னர் கார்த்திகேயனுக்கு ராமநாதபுரம் சட்டக்கல்லூரியில் இடம் கிடைத்தது.

இந்தநிலையில் அங்கு கல்விக்கட்டணம் செலுத்துவதற்கான காலம் முடிந்துவிட்டதாக தெரிவிக்கிறார்கள்.

எனது மகனின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, கல்விக்கட்டணத்தை செலுத்த அனுமதிக்குமாறு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி எம்.சுந்தர், மனுதாரர் மகனிடம் கல்விக்கட்டணத்தை பெற வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இதற்கிடையே மதுரை சிறையில் உள்ள கார்த்திகேயன், தனக்கு ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மதுரை ஐகோர்ட்டு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. முடிவில் மனுதாரருக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்