அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம் - மணக்காடு ஊராட்சி அலுவலகம் முன்பு நடந்தது

அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி அனைத்து கட்சியினர் மணக்காடு ஊராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-10-04 22:00 GMT
சேதுபாவாசத்திரம்,

சேதுபாவாசத்திரம் அருகே மணக்காடு ஊராட்சியில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி ஊராட்சி அலுவலகம் முன்பு அனைத்துக்கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி ஆத்மநாதன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மணக்காடு ஊராட்சியில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் வீட்டு உபயோக பொருட்கள், விவசாய மின் மோட்டார்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயங்கவில்லை. எனவே புதிதாக மின்மாற்றி அமைத்து தர வேண்டும். கிராமத்திற்கு சாலை வசதி, தெரு விளக்கு வசதி உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளை செய்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் தி.மு.க.வை சேர்ந்த குணசேகரன், ஆசைத்தம்பி, பா.ஜ.க.வை சேர்ந்த ஆறுமுகம், காங்கிரசை சேர்ந்த விஸ்வலிங்கம், தமிழக மக்கள் புரட்சி கழகத்தை சேர்ந்த ராசா, அ.ம.மு.க.வை சேர்ந்த ராமமூர்த்தி, நாம் தமிழர் கட்சியை சேர்ந்த தனபால், திராவிடர் விடுதலை கழகத்தை சேர்ந்த ஜெயச்சந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் கருப்பையா உள்ளிட்ட அனைத்து கட்சியினர் கலந்துகொண்டனர்.

தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் சங்கீதா, கிராம உதவியாளர் மலர் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.

மேலும் செய்திகள்