மன்னார் வளைகுடாவில் 15 ஆண்டுகளுக்கு பிறகு ஆய்வு: புதிதாக 112 கடல்வாழ் உயிரினங்கள் கண்டுபிடிப்பு

மன்னார் வளைகுடா பகுதியில் 15 ஆண்டுகளுக்கு பிறகு மேற்கொண்ட ஆய்வில் புதிதாக 112 கடல்வாழ் உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.

Update: 2019-10-04 22:30 GMT
தூத்துக்குடி, 

கடல்சார் பல்லுயிர் பெருக்கத்துக்கு புகழ்பெற்ற மன்னார் வளைகுடாவில் பாம்பன் முதல் தூத்துக்குடி வரை 21 தீவுகள் அமைந்து உள்ளன. இந்த மன்னார் வளைகுடா பகுதி தேசிய பூங்காவாக அறிவிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. இங்கு மொத்தம் 4 ஆயிரத்து 223 கடல்வாழ் உயிரினங்கள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு உள்ளன. இந்நிலையில் மன்னார் வளைகுடாவில் தற்போதுள்ள கடல்வாழ் உயிரியல் வளம் குறித்து விரிவான ஆய்வு நடத்த மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் பருவநிலை மாற்றத்துக்கான அமைச்சகம் நடவடிக்கை எடுத்தது. இந்த ஆய்வை நடத்த தூத்துக்குடியில் உள்ள சுகந்தி தேவதாசன் கடல் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சுகந்தி தேவதாசன் கடல் ஆராய்ச்சி நிறுவனத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், தமிழக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை மற்றும் நபார்டு வங்கி மேற்பார்வையில் ஆய்வை மேற்கொண்டனர். ராமேசுவரம் முதல் கன்னியாகுமரி வரை கடந்த 2017-ம் ஆண்டு மே மாதம் முதல் 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை விரிவான ஆய்வு நடத்தினர்.

சுமார் 15 ஆண்டுகளுக்கு பிறகு மன்னார் வளைகுடாவில் நடந்த ஆய்வில் பல முக்கிய தகவல்களை ஆராய்ச்சியாளர்கள் சேகரித்து உள்ளனர்.

இதுகுறித்து சுகந்தி தேவதாசன் கடல் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் ஜே.கே.பேட்டர்சன் எட்வர்டு கூறியதாவது:-

மன்னார் வளைகுடாவில் கடந்த 2003-2005-ம் ஆண்டு பவளப்பாறைகளை பற்றி மட்டும் ஆய்வு நடத்தி அடிப்படை தகவல்கள் சேகரிக்கப்பட்டன. தொடர்ந்து ஆண்டுதோறும் இந்த பகுதியில் கடல்வாழ் உயிரினங்கள் குறித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. தற்போது ராமேசுவரம் முதல் கன்னியாகுமரி வரை 345 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஆய்வு நடத்தப்பட்டு உள்ளது. கரையில் இருந்து கடலுக்குள் 10 கிலோ மீட்டர் தொலைவு வரை ஆய்வு நடத்தப்பட்டது.

பவளப்பாறைகள் மற்றும் கடல் புற்களுக்கு ஏற்படக்கூடிய முக்கியமான ஆபத்துக்கள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ராமேசுவரம் முதல் கன்னியாகுமரி வரை உள்ள பகுதிகள் 10 மண்டலங்களாக பிரித்து ஆய்வு நடத்தப்பட்டது.

இந்த ஆய்வில், மன்னார் வளைகுடா பகுதியில் 62 புதிய கடல்வாழ் உயிரினங்கள் கண்டறியப்பட்டு, அவை அடையாளம் காணப்பட்டு பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதில் 14 கடின பவளப்பாறை இனங்கள், 17 மிருதுவான பவளப்பாறை இனங்கள், 2 கடல்பாசி இனங்கள், 2 மீன் இனங்கள், 11 கடல்பஞ்சு இனங்கள், 16 சங்கு இனங்கள் கண்டறியப்பட்டு உள்ளன. இதில் 48 உயிரினங்கள் வடக்கு பகுதியிலும், 14 உயிரினங்கள் தெற்கு பகுதியிலும் கண்டறியப்பட்டுள்ளன.

மேலும், அடையாளம் காணமுடியாத 50 புதிய உயிரினங்களும் கண்டறியப்பட்டு உள்ளன. இதில் 39 வடக்கு பகுதியிலும், 11 தெற்கு பகுதியிலும் காணப்பட்டன. இவைகளை அடையாளம் காண சர்வதேச ஆராய்ச்சியாளர்களின் உதவியுடன் முயன்று வருகிறோம். இந்த உயிரினங்கள் அனைத்தும் மன்னார் வளைகுடாவுக்கு புதிதானவை ஆகும்.

மன்னார் வளைகுடா பகுதியில் புதிதாக 77 பவளப்பாறை திட்டுகள் கண்டறியப்பட்டு உள்ளன. இந்த திட்டுகள் 90 முதல் 730 சதுர மீட்டர் பரப்பில் அமைந்து உள்ளன. இந்த திட்டுகள் 3 மீட்டர் முதல் 25 மீட்டர் ஆழத்தில் காணப்படுகின்றன. இவைகளின் மொத்த பரப்பு 20.60 சதுர கிலோ மீட்டர் ஆகும். இதில் வடக்கு பகுதியில் 15.1 சதுர கிலோ மீட்டர் பரப்பும், தெற்கு பகுதியில் 5.4 சதுர கிலோ மீட்டர் பரப்பும் உள்ளன. இந்த திட்டுகளில் பவளப்பாறை 10 சதவீதம் முதல் 52 சதவீதம் வரை காணப்படுகின்றன.

இதேபோல் 39 புதிய கடல்புல் திட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. அவைகள் 150 முதல் 340 சதுர மீட்டர் பரப்பில் அமைந்து உள்ளன. இந்த திட்டுகள் 4 மீட்டர் முதல் 12 மீட்டர் ஆழத்தில் காணப்படுகின்றன. இவைகளின் மொத்த பரப்பு 8.51 சதுர கிலோ மீட்டர் ஆகும். இதில் வடக்கு பகுதியில் 3.15 சதுர கிலோ மீட்டர் பரப்பும், தெற்கு பகுதியில் 5.36 சதுர கிலோ மீட்டர் பரப்பும் உள்ளன. இந்த திட்டுகளில் கடல்புல் 10 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை காணப்படுகின்றன.

மன்னார் வளைகுடாவில் பருவநிலை மாற்றம், மாசு காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்ட நிலையிலும், அதிகப்படியான உயிரினங்கள் காணப்படுகிறது. இது மீனவர்களின் வாழ்வாதாரமாக விளங்கி வருகிறது. ஏற்கனவே செயற்கை பவளப்பாறைகள் மூலம் வான்தீவு அழிவில் இருந்து பாதுகாக்கப்பட்டு உள்ளது. அரசு பவளப்பாறைகள் வெட்டி எடுப்பதை தடுப்பதற்காக மேற்கொண்ட முயற்சி மற்றும் மீனவர்களுக்கு போதிய விழிப்புணர்வு அழிக்கப்பட்டதால் பல்லுயிர்கள் பெருகி உள்ளன. மேலும் இங்கு உள்ள பல்லுயிர் பெருக்கத்தை பாதுகாக்க வேண்டும். கடல்வாழ் உயிரினங்களின் உறைவிடமான பவளப்பாறைகள் மற்றும் கடல்புற்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்