தசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் மகிஷா சூரசம்ஹாரம் 8-ந்தேதி நடக்கிறது

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவின் 10-ம் நாளான வருகிற 8-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) இரவில் மகிஷா சூரசம்ஹாரம் நடக்கிறது.

Update: 2019-10-04 21:30 GMT
குலசேகரன்பட்டினம், 

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் பிரசித்தி பெற்ற தசரா திருவிழா கடந்த 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை முதல் இரவு வரையிலும் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெறுகிறது.

தினமும் மாலையில் கோவில் கலையரங்கில் சமய சொற்பொழிவு, கலைநிகழ்ச்சி நடக்கிறது. தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். 5-ம் நாளான நேற்று முன்தினம் இரவில் காமதேனு வாகனத்தில் நவநீதகிருஷ்ணர் கோலத்தில் அம்மன் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

6-ம் நாளான நேற்று காலை முதல் இரவு வரையிலும் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. மாலையில் கோவில் கலையரங்கில் சமய சொற்பொழிவு, நகைச்சுவை பட்டிமன்றம் நடந்தது. இரவில் சிம்ம வாகனத்தில் மகிசாசுரமர்த்தினி கோலத்தில் அம்மன் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதற்கிடையே கோவிலில் கொடியேற்றம் நடந்ததும், பல்வேறு நாட்கள் விரதம் இருந்த பக்தர்கள், காப்பு அணிந்து நேர்த்திக்கடனாக பல்வேறு வேடங்களை அணிந்தனர். ஒவ்வொரு ஊரிலும் வேடம் அணியும் பக்தர்கள் தசரா குழு அமைத்து, அங்குள்ள கோவில் வளாகத்தில் தசரா பிறை அமைத்து தங்கியிருந்து, ஒரு வேளை மட்டும் பச்சரிசி உணவு சாப்பிட்டு விரதம் இருந்து அம்மனை வழிபடுகின்றனர். வேடம் அணியும் பக்தர்கள் ஊர் ஊராக சென்று காணிக்கை வசூல் செய்து, 10-ம் நாளில் கோவிலில் செலுத்துவார்கள்.

விழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம், 10-ம் நாளான வருகிற 8-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு 12 மணிக்கு நடக்கிறது. 11-ம் நாளான 9-ந்தேதி (புதன்கிழமை) மாலை 4.30 மணிக்கு காப்பு களைதல் நடைபெறும். 12-ம் நாளான 10-ந்தேதி (வியாழக்கிழமை) மதியம் 12 மணிக்கு சிறப்பு பாலாபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

விழா ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் ரோஜாலி சுமதா, இணை ஆணையர் பரஞ்ஜோதி, நிர்வாக அலுவலர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்