நாங்குநேரி தொகுதியில் 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ரெட்டியார்பட்டி நாராயணன் வெற்றி பெறுவது உறுதி: அமைச்சர் தங்கமணி பேட்டி

நாங்குநேரியில் 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ரெட்டியார்பட்டி நாராயணன் வெற்றி பெறுவது உறுதி என அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.

Update: 2019-10-04 22:15 GMT
நாங்குநேரி, 

நாங்குநேரி சுங்கச்சாவடி அருகே உள்ள ஓட்டல் கட்டிடத்தில் அ.தி.மு.க. தலைமை தேர்தல் காரியாலயம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அமைச்சர் தங்கமணி தலைமை தாங்கினார். நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் கே.ஆர்.பி.பிரபாகரன், நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ரிப்பன் வெட்டி காரியாலயத்தை திறந்து வைத்தார்.

பின்னர் அமைச்சர் தங்கமணி பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

ஜெயலலிதா நல்லாசியுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஆணைப்படி நாங்குநேரியில் ரெட்டியார்பட்டி நாராயணனை நிறுத்தி உள்ளோம். அவர் 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி. எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் ஏதோ நாங்குநேரி தொகுதியில் பணபலத்தை வைத்து வெற்றி பெற பார்க்கிறார்கள் என கூறியிருக்கிறார். உண்மையிலேயே ரெட்டியார்பட்டி நாராயணன் தான் ஏழை வேட்பாளர். கிராம பகுதியை சேர்ந்தவர். மண்ணின் மைந்தன்.

ஆனால் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ரூபி மனோகரன் பெரிய கோடீஸ்வரர். இறக்குமதி வேட்பாளர். பல கோடிகளை செலவழித்து வெற்றி பெறுவதற்காக நிறுத்தப்பட்டுள்ளார். அ.தி.மு.க. இந்த தொகுதியில் அரசு நிறைவேற்றி உள்ள பல்வேறு நலத்திட்டங்களை மக்களிடம் எடுத்துக்கூறி வெற்றி பெறும். பொங்கல் பரிசு தலா ஆயிரம் ரூபாய், வறட்சி நிவாரண நிதி ரூ.2 ஆயிரம் போன்ற திட்டங்கள் அ.தி.மு.க.வுக்கு வெற்றியை தேடித்தரும். மேலும் ரெட்டியார்பட்டி நாராயணனை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பிரசாரம் செய்ய வர இருக்கிறார்கள். தொகுதியில் சில இடங்களில் கருப்புக்கொடி கட்டியிருப்பது, அவர்கள் ஒரு சில கோரிக்கைகளை கேட்டுள்ளார்கள். அது நிறைவேற்றப்படும். அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த், ஜி.கே.வாசன், சரத்குமார், ஜான் பாண்டியன், கிருஷ்ணசாமி போன்ற கூட்டணி கட்சி தலைவர்களும் வாக்கு சேகரிக்க உள்ளார்கள். பாரதீய ஜனதா தலைவர்களும் ஆதரவு தெரிவித்துள்ளார்கள். நதிநீர் இணைப்பு திட்ட பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அமைச்சர் தங்கமணி கூறினார்.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ராஜலட்சுமி, காமராஜ், கடம்பூர் ராஜூ, எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர், வளர்மதி, பாஸ்கரன், வெல்லமண்டி நடராஜன், பி.ரவீந்திரநாத் எம்.பி, விஜிலா சத்யானந்த் எம்.பி., டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரம், முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், ஜெயபால், சிவபதி, எம்.எல்.ஏ.க்கள் ராஜன் செல்லப்பா, மனோகரன், செல்வ மோகன்தாஸ் பாண்டியன், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் தமிழ் மகன் உசேன், ஜெயலலிதா பேரவை செயலாளர்கள் இ.நடராஜன், ஜெரால்டு, சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் காபிரியேல் ராஜன், எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட செயலாளர் பெரிய பெருமாள், விவசாய பிரிவு மாவட்ட செயலாளர் முருகேசன், நாங்குநேரி ஒன்றிய செயலாளர் விஜயகுமார், முன்னாள் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் நாராயண பெருமாள், முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.பி.ஆதித்தன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

நெல்லை சீவலப்பேரி துர்க்கையம்மன் கோவிலில் அ.தி.மு.க. வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் சிறப்பு வழிபாடு நடத்தி, தனது பிரசாரத்தை தொடங்கினார். தொடர்ந்து சீவலப்பேரி பஜார், மடத்துப்பட்டி, பொட்டல்காலனி, சந்தைப்பேட்டை, கான்சாபுரம், மருதூர், மேலத்தோனித்துறை, கீழத்தோனித்துறை, கீழப்பாட்டம், திருமலைக்கொழுந்துபுரம், மேலப்பாட்டம் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் செய்தார். அவருடன், அமைச்சர்கள் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் சென்றனர்.

பிரசாரத்தில் அமைச்சர் தங்கமணி பேசுகையில், “ரெட்டியார்பட்டி நாராயணன் இந்த மண்ணின் மைந்தன். இந்த பகுதி மக்களுக்கு தொடர்ந்து குரல் கொடுப்பார். அவரை இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்“ என்றார்.

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில், “சாதி, மதங்களுக்கு அப்பார்பட்டு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் செயல்பட்டது போது தற்போது, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் செயல்பட்டு வருகிறார்கள். இந்த ஆட்சியின் கீழ் சீவலப்பேரி மக்களுக்கு பல நல்ல திட்டங்கள் கிடைக்க ரெட்டியார்பட்டி நாராயணனுக்கு வாக்கு அளியுங்கள்“ என்றார்.

மேலும் செய்திகள்