“முத்தலாக் தடை சட்டத்தால் வெற்றி வாய்ப்பை இழந்தோம்” நாங்குநேரி அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பரபரப்பு பேச்சு

“வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் முத்தலாக் தடை சட்டத்தால் வெற்றி வாய்ப்பை இழந்தோம்” என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.

Update: 2019-09-30 22:15 GMT
நாங்குநேரி,

நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நாங்குநேரி ரெயில் நிலையம் அருகே உள்ள திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.

நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் பிரபாகரன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் விஜயகுமார் (நாங்குநேரி), ராமசுப்பிரமணியன் (பாளையங்கோட்டை), ஜெயராமன் (களக்காடு) ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் மிக குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. வெற்றி வாய்ப்பை இழந்தது. வேலூரில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் 3 தொகுதியில் அ.தி.மு.க. அதிக வாக்குகள் பெற்றது. குறிப்பாக துரைமுருகன் தொகுதியில் அதிக வாக்குகளை பெற்றோம். வேலூர் நாடாளுமன்ற தேர்தலின் போது, மத்திய அரசு முத்தலாக் தடை சட்டத்தை நிறைவேற்றியதால் அந்த தேர்தலில் நாம் வெற்றி வாய்ப்பை இழந்தோம்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தை கூட்டி தமிழக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றி ஆட்சியை வீட்டிற்கு அனுப்புவதாக பேசி வந்தார். ஆனால் அதிக பெரும்பான்மை உள்ள அ.தி.மு.க.விடம், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 20 பேர் வர உள்ளதை அறிந்த மு.க.ஸ்டாலின் இப்போது ஆட்சி கலைப்பு பற்றி பேசுவது இல்லை. தற்போது தி.மு.க.வை மு.க.ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் மூலம் வளர்த்து வருகிறார். அவருக்கு இளைஞரணி பொறுப்பையும் வழங்கி உள்ளார். குற்றமில்லாதவர் எவரும் இல்லை. குற்றம் பார்க்கின் சுற்றமில்லை. தற்போது நடைபெற உள்ள தேர்தல் செயற்கையானது. தப்பு செய்தவர்களுக்கு நிச்சயம் தோல்வி என்ற தண்டனை உண்டு.

இவ்வாறு அவர் பேசினார்.

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், “இந்த தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புதிய சரித்திரம் படைக்கப்போகிறார். இங்குள்ள மக்கள் காங்கிரஸ் வேட்பாளரை சந்திக்க தாம்பரம் தான் செல்ல வேண்டும்.

அ.தி.மு.க.விடம் வெள்ளை அறிக்கை கேட்கும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தற்போதைய காங்கிரஸ் வேட்பாளரை பற்றிய வெள்ளை அறிக்கையை பிரசாரத்தில் வெளியிட வேண்டும். 2021-ம் ஆண்டு தேர்தலிலும் அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும்“ என்றார்.

வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறுகையில், “அ.தி.மு.க. சாமானியர்களின் இயக்கம். கடைக்கோடியில் கொடிபிடித்தவரும், கோட்டையில் முன்வரிசையில் அமரலாம் என்பது அ.தி.மு.க.வில் தான் முடியும். மக்கள் கொடுத்த வாய்ப்பை தூக்கி எறிந்து அவமதித்தவர் வசந்தகுமார். வேறு ஒரு நபரை வைத்து பார்த்துக் கொள்ளலாம் என்று இங்கு மீண்டும் வந்துள்ளார். அவரை மக்கள் ஏற்கமாட்டார்கள்“ என்றார்.

கூட்டத்தில் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா, வெல்லமண்டி நடராஜன், ராஜலட்சுமி, கடம்பூர் ராஜூ, காமராஜ், பாஸ்கரன், ராஜேந்திரபாலாஜி, விஜயபாஸ்கர், வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன், விஜிலா சத்யானந்த் எம்.பி., அமைப்பு செயலாளர் சுதா பரமசிவன், முன்னாள் எம்.பி.க்கள் மனோஜ் பாண்டியன், சவுந்தரராஜன், எம்.எல்.ஏ.க்கள் செல்வமோகன்தாஸ் பாண்டியன், முருகையா பாண்டியன், பாளையங்கோட்டை ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் முத்துக்குட்டி பாண்டியன், கண்டிகைபேரி ஜான்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்