கடையநல்லூர் அருகே அடவிநயினார் அணை சாலையில் மீண்டும் மண்சரிவு - வாகனங்கள் செல்ல தடை

கடையநல்லூர் அருகே அடவிநயினார் அணை சாலையில் மீண்டும் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2019-09-30 21:30 GMT
அச்சன்புதூர், 

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள மேக்கரை அடவிநயினார் அணையில் இருந்து மேட்டுக்கால் பகுதிக்கு செல்லும் ஷட்டர் கடந்த மாதம் உடைந்தது. இதில் அளவுக்கு அதிகமான தண்ணீர் சென்று சாலை பெயர்ந்ததுடன், மண்சரிவும் ஏற்பட்டது. இதனால் வடகரையில் இருந்து மேக்கரை அடவிநயினார் அணைக்கு செல்லும் சாலை துண்டிக்கப்பட்டது.

அப்போது சேதம் அடைந்த சாலைகளில் மணல் மூட்டைகள் அடுக்கி, உடனடியாக சரிசெய்யப்பட்டு வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது. இந்தநிலையில் நேற்று முன்தினம் பெய்த கனமழையில் மேட்டுக்காலில் அதிகப்படியான தண்ணீர் வந்ததால் மீண்டும் சாலையில் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் சாலைகள் சேதம் அடைந்தது.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் தென்காசி உதவி கலெக்டர் பழனிகுமார், செங்கோட்டை தாசில்தார் ஓசன்னா பெர்னாண்டஸ் மற்றும் அதிகாரிகள் குழுவினர் அணை பகுதிக்கு வந்தனர். மண்சரிவால் சேதம் அடைந்த சாலையை பார்வையிட்டனர். பின்னர் மேட்டுக்கால் பகுதிக்கு மூன்று, நான்கு சக்கர வாகனங்கள் செல்ல தடை விதித்தனர். அதனை தொடர்ந்து உடனடியாக சாலையை சீரமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை கேட்டுக் கொண்டனர்.

மண்சரிவு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து அடவிநயினார் அணைக்கு செல்ல சுற்றுலா பயணிகள் மற்றும் விவசாயிகள், பொதுமக்களுக்கு வாகனங்களில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் பல மைல் தூரம் விவசாயிகள் சுற்றி செல்கின்றனர். உடனடியாக கால்வாய் கரையோரம் பொதுப்பணித்துறை சார்பில் தடுப்புச்சுவர் கட்ட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்