பாவூர்சத்திரம் அருகே, டெங்கு காய்ச்சலுக்கு மெக்கானிக் பலி - மேலும் 5 பேருக்கு சிகிச்சை

பாவூர்சத்திரம் அருகே டெங்கு காய்ச்சலுக்கு மெக்கானிக் பலியானார். இதுதவிர 5 பேருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Update: 2019-09-28 22:45 GMT
பாவூர்சத்திரம்,

நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள ராமச்சந்திரபட்டினத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 35), மெக்கானிக். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் விபத்தில் சிக்கினார்.

இதனால் அவர் மதுரையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் அவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து சுகாதார துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சங்கரன்கோவில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் நளினி மேற்பார்வையில், சுகாதாரத்துறை அதிகாரிகள் ராமச்சந்திரபட்டினத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதே நேரத்தில் பாலசுப்பிரமணியன் மேல்சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டில் உள்ள மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் பாலசுப்பிரமணியன் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இறந்த பாலசுப்பிரமணியனுக்கு பொன்மாரி (30) என்ற மனைவியும், தமிழ், மதன் ஆகிய 2 மகன்களும் உள்ளனர். இது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா நேற்று டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டார். அப்போது அவர் கூறுகையில், “நெல்லை மாவட்டத்தில் பாவூர்சத்திரம் பகுதியில் 2 பேருக்கும், நெல்லை மாநகராட்சி 41-வது வார்டில் ஒரு பெண்ணுக்கும் டெங்கு காய்ச்சல் உள்ளது. அவர்கள் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்த பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

பொதுமக்களிடம் டெங்கு குறித்து ஏற்படுத்தப்பட்ட விழிப்புணர்வால் கடந்த காலங்களில் டெங்கு பாதிப்பு வெகுவாக குறைந்து உள்ளது. இந்த ஆண்டு நெல்லை மாவட்டத்தில் டெங்கு பாதிப்பு பரவாத நிலையை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.

இந்த நிலையில் நேற்று சங்கரன்கோவிலை சேர்ந்த மனிஷா (10), ஊத்துமலை அருகே ரெட்டியார்பட்டியை சேர்ந்த சேர்மசெல்வி (9) ஆகிய 2 பேரும் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

மேலும் செய்திகள்