கூடங்குளத்தில் போலி சான்றிதழ் மூலம் வேலை: தனியார் நிறுவன ஒப்பந்த தொழிலாளர்கள் 3 பேர் கைது

போலி சான்றிதழ் கொடுத்து வேலை செய்ததாக தனியார் நிறுவன ஒப்பந்த தொழிலாளர்கள் 3 பேரை கூடங்குளம் போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-09-21 21:30 GMT
கூடங்குளம், 

நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா கூடங்குளத்தில் ரஷிய நாட்டின் தொழில்நுட்ப உதவியுடன் அணுமின் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு தலா ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்ட 2 அணுஉலைகள் உள்ளன. இங்கு நடைபெறும் பணிகளை பல்வேறு தனியார் நிறுவனங்கள் ஒப்பந்தம் எடுத்து செய்து வருகின்றன.

இந்தநிலையில் ஒரு நிறுவனத்தின் சார்பில் வேலை பார்த்து வரும் ஒப்பந்த தொழிலாளர்களின் சான்றிதழ்கள் தணிக்கை செய்யப்பட் டன. இதில் வடமாநிலத்தை சேர்ந்த 3 பேர், போலீசார் வழங்கும் உண்மை சரிபார்ப்பு சான்றிதழை போலியாக தயாரித்து கொடுத்து வேலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து கூடங்குளம் போலீசில், அணுமின் நிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படை ஆய்வாளர் ஸ்ரீராஜேஷ் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ஜெகதா வழக்குப்பதிவு செய்து, மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த தீன்பந்து (வயது 55), வால்ராம் கேவட் மகன் வாசுதேவ் கேவட் (26), ராமதுர் ஓமணி மகன் பிரசாத் கேவட் ஆகிய 3 பேரையும் கைது செய்தார்.

பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்