மேலப்பாளையம் பகுதியில் வீடுகளில் பதுக்கிய 800 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல் - 2 பேர் கைது

மேலப்பாளையம் பகுதியில் வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 800 கிலோ போதைப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2019-09-20 22:45 GMT
நெல்லை, 

நெல்லை மாநகர பகுதியில் கஞ்சா, போதை பாக்கு, புகையிலை உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மாநகர போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனர் சரவணன் உத்தரவின் பேரில் உதவி போலீஸ் கமிஷனர் சதீஷ்குமார், மேலப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பர்னபாஸ் ஆகியோர் தலைமையில் போலீசார் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

மேலப்பாளையத்தில் ஒரு வீட்டிலும், வீரமாணிக்கப்புரத்தில் ஒரு வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை, போதை பாக்குகள் என 800 கிலோ போதைப்பொருட்கள் பண்டல்களாக பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக மேலப்பாளையத்தை சேர்ந்த முகமதுஅலி, மகாலிங்கம் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். வீடுகளில் பதுக்கிய 800 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்