குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா விழா கொடியேற்ற நேரத்தை மாற்றக்கூடாது - அறநிலையத்துறை இணை ஆணையரிடம் பக்தர்கள் மனு

குலசேகரன்பட்டினம் தசரா விழா கொடியேற்றும் நேரத்தை மாற்றக்கூடாது என்று நெல்லை மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையரிடம் பக்தர்கள் மனு கொடுத்தனர்.

Update: 2019-09-16 22:00 GMT
நெல்லை,

தூத்துக்குடி மாவட்டம் உதிரமாடன் குடியிருப்பு தசராக்குழு தலைவர் வெள்ளத்துரை மற்றும் உடன்குடி குலசை தசரா பக்தர்கள் நேற்று நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள நெல்லை மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் இணை ஆணையர் பரஞ்ஜோதியை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் கூறிஇருப்பதாவது:-

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா விரைவில் நடைபெற இருக்கிறது. இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் கடந்த 7-ந்தேதி நடைபெற்றது. அப்போது வருகிற 29-ந்தேதி அதிகாலை 5.40 மணிக்கு கொடியேற்றத்துடன் விழா தொடங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு முடிவு எடுக்கப்பட்டது.

இந்த நிலையில் கொடியேற்ற நேரத்தை மாற்றுவதற்கு முயற்சிகள் நடைபெற்று வருகிறது.

இதை தடுத்து நிறுத்தி திட்டமிட்டபடி அதிகாலை 5.40 மணிக்கு கொடியேற்றும் நிகழ்ச்சியை நடத்த வேண்டும்.

கொடியேற்று விழாவில் குழப்பத்தை ஏற்படுத்த திட்டமிட்டு செயல்பட்டு வரும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சமுதாய ரீதியாக செயல்படுகிறவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்