கூடங்குளம் அருகே விபத்து: டிரைவர்-கிளனர் பரிதாப சாவு

கூடங்குளம் அருகே நின்ற லாரி மீது சரக்கு வேன் மோதிய விபத்தில் டிரைவர், கிளனர் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.

Update: 2019-09-06 22:00 GMT
கூடங்குளம்,

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் இருந்து நேற்று காலை குமரி மாவட்டம் மார்த்தாண்டத்திற்கு எம்சாண்ட் மணல் ஏற்றிக் கொண்டு டாரஸ் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. கூடங்குளத்தை அடுத்த பொன்னார்குளம் அருகே சென்றபோது, லாரியின் ஒரு டயர் எதிர்பாராதவிதமாக கழன்று ஓடியது. இதனால் டிரைவர் உடனடியாக லாரியை ரோட்டோரமாக நிறுத்தினார். பின்னர் டிரைவரும், கிளனரும் லாரியை விட்டு இறங்கி பழுதை சரி செய்து கொண்டிருந்தனர்.

அப்போது கூடங்குளத்தில் இருந்து ஈத்தங்காடு நோக்கி கற்களை ஏற்றிக் கொண்டு வந்த சரக்கு வேன் ஒன்று, நின்ற டாரஸ் லாரியின் பின்னால் பயங்கரமாக மோதியது. இதில் சரக்கு வேன் அப்பளம் போல் நொறுங்கியது.

டாரஸ் லாரியின் பின்னால் நின்று கொண்டிருந்த கிளனரான, மார்த்தாண்டம் காப்பிக்காடு அருகே உள்ள மாராயபுரம் ஊரைச் சேர்ந்த அர்ச்சுனன் மகன் அஜி (வயது 26) சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தார். மேலும் சரக்கு வேன் டிரைவரான நாகர்கோவில் அருகே உள்ள வடக்கு தாமரைகுளத்தை சேர்ந்த மருதப்பன் மகன் முருகன் (35) இருக்கையிலேயே உடல் நசுங்கி பிணமானார். லாரி டிரைவரான காப்பிக்காடு அருகே உள்ள பார்காடு ஊரைச் சேர்ந்த சுபின், லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் பழவூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். காயம் அடைந்த டிரைவர் சுபினை மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தில் பலியான 2 பேர் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்