நகைக்கடைகளில் நூதன முறையில் மோதிரம் திருடிய என்ஜினீயர்

புதுச்சேரி நகைக்கடைகளில் நூதன முறையில் மோதிரம் திருடிய என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-09-05 23:18 GMT
புதுச்சேரி,

புதுச்சேரி அண்ணாசாலையில் உள்ள பிரபல நகைக்கடைக்கு கடந்த 2-ந் தேதி இரவு வாலிபர் ஒருவர் வந்தார். அவர் மோதிரம் வாங்க வேண்டும் என்று கூறினார். உடனே அங்கு இருந்த விற்பனை பிரதிநிதிகள் பல்வேறு மோதிர மாதிரிகளை எடுத்து காட்டினர். பின்னர் மாடல்கள் எதுவும் பிடிக்கவில்லை என்று அந்த வாலிபர் அங்கிருந்து சென்று விட்டார்.

சம்பவத்தன்று இரவு வாடிக்கையாளர்கள் அனைவரும் சென்ற பின்னர் நகை கடையின் மேலாளர் கடையில் உள்ள நகைகளை கணக்கீடு செய்தார். அப்போது 8 கிராம் எடையுள்ள மோதிரம் வித்தியாசமாக இருந்தது. இதனை பார்த்த அவர் அதனை பரிசோதித்து பார்த்தார். அப்போது அந்த மோதிரம் கவரிங் என்பது தெரியவந்தது. மோதிரம் வாங்க வந்த நபர் கவரிங் மோதிரத்தை வைத்து விட்டு தங்க மோதிரத்தை நூதன முறையில் திருடிச்சென்றது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து நகைக்கடை ஊழியர்கள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து பார்த்தனர். அப்போது மோதிரம் வாங்க வந்த வாலிபர் நூதன முறையில் திருடி சென்றது தெரியவந்தது. இதனை தொடர்ந்து நகைக்கடை ஊழியர்கள் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இது தொடர்பாக அனைத்து நகைக்கடைகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் அந்த பகுதியில் உள்ள ஒரு நகைக்கடைக்கு சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் ஒரு வாலிபர் வந்தார். அவரை அங்கு இருந்த ஊழியர்கள் கண்காணித்தனர். அப்போது அவர் கவரிங் மோதிரத்தை வைத்து விட்டு 9.54 கிராம் எடையுள்ள மோதிரத்தை எடுத்து தனது கை விரலில் மாட்டிக்கொண்டார். இதனை பார்த்த ஊழியர்கள் அவரை கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் இது குறித்து பெரியகடை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

கிழக்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு மாறன் உத்தரவின் பேரில் பெரியகடை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் முருங்கப்பாக்கம் நாட்டார் தெருவை சேர்ந்த கார்த்திக் (வயது 24) என்பது தெரியவந்தது. உடனே போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், என்ஜினீயரிங் படித்துள்ள அவர் சரியாக வேலை எதுவும் கிடைக்காததால் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுவையில் உள்ள ஒரு நகைக்கடைக்கு சென்று நூதன முறையில் திருடியுள்ளார். இது யாருக்கும் சந்தேகம் ஏற்படவில்லை. எனவே அவர் அன்று அணிந்து சென்ற தொப்பி மற்றும் பேண்ட் - சட்டையை ராசியான உடையாக கருதி தொடர்ந்து அதையே அணிந்தபடி சென்று புதுவை நகர பகுதியில் உள்ள மேலும் 7 கடைகளில் திருடியுள்ளார். இதற்காக அவர் கோவில் திருவிழா கடைகளில் விற்பனை செய்யப்படும் கவரிங் மோதிரங்களை வாங்கி தயாராக வைத்திருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அவரிடம் இருந்து 8 தங்க மோதிரங்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்