சங்கரன்கோவிலில் இழப்பீடு தொகை வழங்காததால் அரசு விரைவு பஸ் ஜப்தி

சங்கரன்கோவிலில் விபத்து இழப்பீடு தொகை வழங்காததால் அரசு விரைவு பஸ் ஜப்தி செய்யப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2019-09-05 22:00 GMT
சங்கரன்கோவில்,

சிவகிரி அருகே உள்ள வெள்ளானைகோட்டையை சேர்ந்தவர் லிங்கதுரை (வயது 40). கூலி தொழிலாளி. இவருக்கு மகாலட்சுமி என்ற மனைவியும், சந்தனக்குமார், மாரித்துரை ஆகிய 2 மகன்களும் உள்ளனர். இந்நிலையில் கடந்த 2.12.2009 அன்று வெள்ளானைகோட்டையில் இருந்து சுப்பிரமணியாபுரம் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்த லிங்கதுரை மீது அரசு விரைவு பஸ் மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுதொடர்பாக விபத்து இழப்பீடு தொகை வழங்கக்கோரி அவரது மனைவி மகாலட்சுமி சங்கரன்கோவில் சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் 12.12.2014 அன்று மகாலட்சுமிக்கு ரூ.7,31,600 வழங்க அரசு விரைவு பஸ் போக்குவரத்து கழகத்திற்கு உத்தரவிட்டது. ஆனால் அவருக்கு இழப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை. இதைதொடர்ந்து 17.4.2018 அன்று மகாலட்சுமி சார்புநீதிமன்றத்தில் நிறைவேற்றல் மனுவை தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த சார்பு நீதிமன்ற நீதிபதி சொர்ணகுமார் கடந்த 26.6.2019 அன்று அசலும், வட்டியுமாக சேர்ந்து மகாலட்சுமிக்கு ரூ.10,86,243 வழங்கவும், இல்லையெனில் அரசு விரைவு பஸ்சை ஜப்தி செய்யவும் உத்தரவிட்டார். ஆனால் இழப்பீடு தொகை வழங்கப்படாததால், நேற்று மதியம் சங்கரன்கோவில் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த நெல்லையில் இருந்து பெங்களுரு செல்லும் அரசு விரைவு பஸ் நீதிமன்ற ஊழியர்களால் ஜப்தி செய்யப்பட்டு நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்