பெரம்பலூர்-ஜெயங்கொண்டத்தில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் - ஆற்றில் கரைக்கப்பட்டன

பெரம்பலூர், ஜெயங்கொண்டத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு ஆற்றில் கரைக்கப்பட்டன.

Update: 2019-09-04 22:30 GMT
பெரம்பலூர்,

விநாயகர் சதுர்த்தியையொட்டி, கடந்த 2-ந் தேதி பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோவில், கடைவீதியில் தேரடி, காந்தி சிலை அருகே உள்ள செல்வவிநாயகர் கோவில், பழைய பஸ்நிலையம் அருகே இந்திரா நகரில் எம்.வி.கே.நகர், எளம்பலூர் சாலையில் நடேசன் தெரு, குளோபல் நகர், ஆர்.எம்.கே.நகர், மேரிபுரம் அருள்சக்தி விநாயகர் கோவில், துறையூர் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர்.நகரில் பாலமுத்துமாரியம்மன் கோவில், சங்குப்பேட்டை பகுதி, வெங்கடேசபுரம், விளாமுத்தூர் சாலை உள்பட நகர்ப்பகுதிகளில் மட்டும் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டன.

இதேபோல பெரம்பலூர் மாவட்டத்தில் வேப்பந்தட்டை, ஆலத்தூர், குன்னம் மற்றும் பெரம்பலூர் தாலுகாக்களில் பல்வேறு பகுதிகள் என மொத்தம் 156 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு 3 நாட்கள் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

அந்த சிலைகளை ஆற்றில் கரைப்பதற்காக நேற்று மாலை சரக்கு வாகனங்களில் ஏற்றப்பட்டு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. ஊர்வலத்திற்கு இந்து முன்னணி மாவட்ட செயலாளர் நடராஜன் தலைமை தாங்கினார். இந்து முன்னணியின் திருச்சி கோட்ட செயலாளர் சிவக்குமார், பெரம்பலூர் தொழிலதிபர் செந்தில்குமார் ஆகியோர் ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர். ஊர்வலத்தில், இந்து முன்னணி பெரம்பலூர் மாவட்ட செயலாளர் செல்வகுமார், மாநில செயற்குழு உறுப்பினர்கள் செந்தில்குமார் கருப்பையா, பெரம்பலூர் நகர பொதுச் செயலாளர் கண்ணன், நகர செயலாளர் விஜய்பிரசாந்த், சேவா பாரதியின் மாவட்ட செயலாளர் சிவபாண்டியன், பா.ஜ.க. மாவட்ட தலைவர் சாமி.இளங்கோவன் மற்றும் இந்து இயக்கங்களின் நிர்வாகிகள், விநாயகர் ஊர்வல கமிட்டி நிர்வாகிகள், இளைஞர்கள் திரளான கலந்து கொண்டனர்.

ஊர்வலம் செல்வ விநாயகர் கோவிலில் இருந்து மேள, தாளம் முழங்க புறப்பட்டு காமராஜர் வளைவு, வடக்கு மாதவி சாலை, சாமியப்பா நகர், எளம்பலூர் சாலை, காமராஜர் சிக்னல், சங்குப்பேட்டை, கடைவீதி வழியாக காந்தி சிலையை அடைந்தது. அதன்பிறகு, விநாயகர் சிலைகள் திருச்சிக்கு எடுத்து செல்லப்பட்டு காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டது.

இதேபோல அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 28 இடங்களிலும், ஆண்டிமடம் பகுதியில் 8 இடங்களிலும், மீன்சுருட்டி பகுதியில் 22 இடங்களிலும், தா.பழூர் பகுதியில் 20 இடங்களிலும், உடையார்பாளையம் பகுதியில் 17 இடங்களிலும், இரும்புலிக்குறிச்சி பகுதியில் 11 இடங்களிலும், விக்கிரமங்கலம் பகுதியில் 13 இடங்களிலும், தூத்தூர் பகுதியில் 8 இடங்களிலும் என 110 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

அந்த விநாயகர் சிலைகளின் ஊர்வலம் ஜெயங்கொண்டம் வேலாயுதம் நகரில் இருந்து புறப்பட்டு பஸ் நிலைய ரோடு, கடைவீதி, சிதம்பரம்ரோடு உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக அணைக்கரைக்கு கொண்டு செல்லப்பட்டு ஆற்றில் கரைக்கப்பட்டன. திருமானூர், திருமழபாடி, கீழப்பழுவூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் 30-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கொள்ளிடம் ஆற்றில் கரைக்கப்பட்டன. அரியலூர் நகர் பகுதியில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் நாளை (வெள்ளிக்கிழமை) ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு மருதையாற்றில் கரைக்கப்பட உள்ளது.

மேலும் செய்திகள்