ஏ.டி.எம் மையத்தில் பணம் எடுக்க உதவுவதாக கூறி தனியார் நிறுவன ஊழியரிடம் மோசடி செய்த வாலிபர் கைது

போடியில் ஏ.டி.எம்.மையத்தில் பணம் எடுத்து தருவதாக கூறி தனியார் நிறுவன ஊழியரிடம் மோசடி செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2019-07-08 22:30 GMT
போடி,

போடியை அடுத்த மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் சன்னாசி (வயது 54). இவர் கோடங்கிப்பட்டி பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் போடியில் தேனி நெடுஞ்சாலையில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க சென்றார். அப்போது பணம் எடுப்பதில் சிரமம் ஏற்பட்டது.

இதனால் அருகில் இருந்த வாலிபர் பணம் எடுக்க உதவுவதாக கூறி உள்ளார். இதை சன்னாசி நம்பி தனது ஏ.டி.எம் கார்டை அவரிடம் கொடுத்து ரகசிய எண்ணை தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சிறிது நேரத்தில் கணக்கில் பணம் இல்லை என கூறி அந்த வாலிபர் சன்னாசியிடம் ஏ.டி.எம். கார்டை கொடுத்து விட்டு அங்கிருந்து சென்று விட்டார். இந்தநிலையில் சிறிது நேரத்தில் சன்னாசியின் வங்கி கணக்கில் இருந்து ரூ. 8 ஆயிரம் எடுக்கப்பட்டதாக செல்போனுக்கு தகவல் வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சன்னாசி அதுகுறித்து போடி நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் விசாரணையில் இந்த மோசடியில் ஈடுபட்டவர் போடி வடக்கு ரத வீதியை சேர்ந்த ஈஸ்வரன் (26) என தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். ஈஸ்வரன் ரூ.8 ஆயிரத்தில் ரூ.5 ஆயிரத்தை செலவு செய்து விட்டதால் அவரிடம் இருந்து ரூ.3 ஆயிரத்தை போலீசார் மீட்டனர். 

மேலும் செய்திகள்