கோவில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்யக்கோரி 14-ந் தேதி ஆர்ப்பாட்டம் ராமகோபாலன் பேட்டி

கோவில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்யக்கோரி வருகிற 14-ந் தேதி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என கன்னியாகுமரியில் ராமகோபாலன் கூறினார்.

Update: 2019-07-07 23:00 GMT
கன்னியாகுமரி,

இந்து முன்னணி மாநில அமைப்பாளர் ராமகோபாலன் நேற்று காலையில் கன்னியாகுமரிக்கு வந்தார். அங்கு கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், திருப்பதி வெங்கடாசலபதி கோவில், விவேகானந்தபுரத்தில் உள்ள பாரத மாதா கோவில் ஆகியவற்றில் தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கோவில்களில் தரிசன கட்டணம் வசூலிக்க கூடாது. கட்டணம் வசூலிக்க கடவுள் காட்சி பொருள் அல்ல. தமிழகம் முழுவதும் கோவில்களில் சாமி தரிசனத்துக்கு வசூலிக்கப்படும் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். மேலும், கோவிலை விட்டு அரசு வெளியேற வேண்டும்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 14-ந் தேதி மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இந்த போராட்டம் குமரி மாவட்டத்தில் ஒன்றிய அளவில் நடைபெறும். மற்ற மாவட்டங்களில் முக்கிய இடங்களில் நடக்கிறது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஏற்கனவே தொடர் போராட்டம் நடத்தி உள்ளோம். இதில் வெற்றி பெற நூற்றாண்டு ஆகும்.

சென்னையில், அடுத்த ஆண்டு ஜூன் மாதம் மாநில இந்து எழுச்சி மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளோம். இதில் சாமியார்கள், மடாபதிபதிகள், முக்கிய பிரமுகர்கள், பலர் கலந்து கொள்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

அவருடன், மாநில பொது செயலாளர் அரசுராஜா, குமரி மாவட்ட துணை தலைவர் அசோகன், கன்னியாகுமரி நகர ஆர்.எஸ்.எஸ். பொறுப்பாளர் முருகன், கன்னியாகுமரி பகவதி அம்மன் பக்தர்கள் சங்க தலைவர் வேலாயுதம், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய பொது செயலாளர் சிவா உள்பட பலர் உடனிருந்தனர். 

மேலும் செய்திகள்