எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த நாராயணகவுடாவின் வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு இரவோடு இரவாக மும்பைக்கு சென்றுவிட்டதாக தகவல்

மண்டியாவில், எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த ஜனதா தளம்(எஸ்) கட்சியைச் சேர்ந்த நாராயணகவுடாவின் வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அவர் இரவோடு, இரவாக குடும்பத்தினருடன் மும்பைக்கு சென்றுவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Update: 2019-07-07 21:45 GMT
மண்டியா, 

கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில் இவ்விரு கட்சிகளில் இருந்தும் 14 எம்.எல்.ஏ.க்கள் திடீரென தங்களுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதனால் கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கூட்டணி ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

பதவியை ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்களில் மண்டியா மாவட்டம் கே.ஆர்.பேட்டை சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வான நாராயணகவுடாவும் ஒருவர். ஜனதா தளம்(எஸ்) கட்சியைச் சேர்ந்த இவரும், மந்திரி பதவி கிடைக்காததால் அதிருப்தியில் இருந்தார். இந்த நிலையில்தான் அவர் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர் பா.ஜனதாவில் சேர இருப்பதாகவும் தகவல் வெளியானது. ஆனால் இன்னும் நாராயண கவுடாவின் ராஜினாமாவை சபாநாயகர் அங்கீகரிக்கவில்லை என்று தெரிகிறது.

இந்த நிலையில் எம்.எல்.ஏ. பதவியை நாராயணகவுடா ராஜினாமா செய்தது பற்றி அறிந்த மண்டியா மாவட்ட ஜனதா தளம்(எஸ்) கட்சியினர் ஆக்ரோஷம் அடைந்தனர். மேலும் அவர்கள் மண்டியா மாவட்டம் கே.ஆர்.பேட்டையில் உள்ள நாராயணகவுடாவின் வீட்டை முற்றுகையிட்டு பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபட முயன்றதாகவும், அவருடைய வீட்டின் மீது கற்களை வீசி தாக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. இதனால் நாராயணகவுடாவின் வீட்டின் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதற்கிடையே நாராயண கவுடா இரவோடு, இரவாக தனது குடும்பத்தினருடன் மும்பைக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அவருக்கு மும்பையில் பல்வேறு தொழில்கள் உள்ளதாகவும், அதை கவனிக்கவே அவர் அங்கு சென்றுவிட்டதாகவும் அவருடைய ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

இருப்பினும் நாராயணகவுடாவின் வீட்டின் முன்பு பதற்றமான சூழ்நிலையே நிலவுகிறது. நாராயணகவுடா விரைவில் மும்பையில் இருந்து வீடு திரும்புவார் என்றும் சொல்லப்படுகிறது.

மேலும் செய்திகள்