மடிக்கணினி வழங்கக்கோரி, அரசு பெண்கள் பள்ளி மாணவிகள் போராட்டம்

அரசு பெண்கள் பள்ளி முன்னாள் மாணவிகள் மடிக்கணினி வழங்க கோரி போராட்டம் நடத்தினர்.

Update: 2019-06-28 22:45 GMT
திருப்பத்தூர், 

திருப்பத்தூர் நாகப்பா மருதப்பா அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2017-18-ம் கல்வியாண்டில் பயின்ற மாணவிகள், தற்போது பயிலும் மாணவிகளுக்கு வழங்க மடிக்கணினி வைக்கப்பட்டிருப்பதை அறிந்து பள்ளியின் முன்பு கூடி தலைமை ஆசிரியையிடம் இதுகுறித்து விளக்கம் கேட்டனர். அவர் சம்பந்தப்பட்ட அமைச்சர், அதிகாரிகளிடம் கேட்குமாறு கூறி மாணவிகளை வெளியே அனுப்பியுள்ளார். ஆத்திரமடைந்த மாணவிகள் பள்ளி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த திருப்பத்தூர் தாசில்தார் தங்கமணி மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மாணவிகள் கல்வி அதிகாரி உத்தரவாதம் அளித்தால் கலைந்து செல்வோம் என்று கூறியதையடுத்து திருப்பத்தூர் கல்வி மாவட்ட அலுவலர் பரமதயாளன் வரவழைக்கப்பட்டார். அவர் மாணவிகளிடம் கோரிக்கை மனுவினைப் பெற்று மடிக்கணினி வழங்க ஆவண செய்யப்படும் என்றதை தொடர்ந்து மாணவிகள் கலைந்து சென்றனர்.

எஸ்.புதூர் அருகே உள்ள உலகம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 2017-18-ம் கல்வியாண்டில் பயின்ற மாணவ-மாணவிகளுக்கு உடனடியாக இலவச மடிக்கணினி வழங்க கோரி 40-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவ-மாணவிகள் கோரிக்கை மனுவினை கலெக்டருக்கு அனுப்பினர். அந்த மனுவில், கிராம பகுதியை சேர்ந்த மாணவ-மாணவிகளாகிய எங்களுக்கு மேற்படிப்பை தொடர மடிக்கணினி மிகவும் பயனுள்ளதாகும். ஆகையால் எங்களுக்கு உடனடியாக மடிக்கணினி வழங்க ஆணையிட வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் செய்திகள்