வீரபாண்டி அருகே பரபரப்பு, முல்லைப்பெரியாற்றில் குதித்து முதியவர் தற்கொலை முயற்சி

வீரபாண்டி அருகே முல்லைப்பெரியாற்றில் குதித்து முதியவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2019-06-27 22:45 GMT
உப்புக்கோட்டை,

வீரபாண்டி கன்னீஸ்வரமுடையார் கோவில் அருகே, முல்லைப்பெரியாற்றில் நேற்று காலை 11.30 மணியளவில் 20-க்கும் மேற்பட்டோர் குளித்து கொண்டிருந்தனர். அப்போது, காவி வேட்டி அணிந்திருந்த முதியவர் ஒருவர் ஓடிவந்து திடீரென ஆற்றுக்குள் குதித்தார். சிறிதுநேரத்தில் அவர் தண்ணீரில் மூழ்கினார்.

இதனைக்கண்டு அங்கு குளித்து கொண்டிருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் ஆற்றுக்குள் மூழ்கிய முதியவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இதுகுறித்து வீரபாண்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து போலீசார் அங்கு வந்து, முதியவரிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர், தேவாரம் அருகே உள்ள சிந்தலைச்சேரி மந்தையம்மன் கோவில் தெருவை சேர்ந்த கோவிந்தராஜ் (வயது 80) என்று தெரியவந்தது. திருமணம் செய்து கொள்ளாத இவர், தனது அண்ணன் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். ஆனால் அவருக்கு யாரும் மரியாதை கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் மனம் உடைந்த அவர், சிந்தலைச்சேரியில் இருந்து பஸ் மூலம் வீரபாண்டிக்கு வந்தார். பின்னர் அவர், தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து முல்லைப்பெரியாற்றில் குதித்தது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து அவரை சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முல்லைப்பெரியாற்றில் குதித்து முதியவர் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம், வீரபாண்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்