சங்கரன்கோவில் அருகே கல்குவாரி பாதைக்கு நிலத்தை அளக்க விவசாயிகள் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

சங்கரன்கோவில் அருகே கல்குவாரி பாதைக்கு நிலத்தை அளக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-06-27 22:00 GMT
சங்கரன்கோவில்,

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ளது வடக்குப்புதூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட அச்சம்பட்டி. இங்கு ராஜபாளையத்தை சேர்ந்த தனபால் என்பவருக்கு சொந்தமான இடம் உள்ளது. இங்கு அவர் கல்குவாரி நடத்த மதுரை ஐகோர்ட்டு கிளையில் அனுமதி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த கல்குவாரியை சுற்றிலும் சுமார் 100 ஏக்கரில் விவசாய நிலங்கள் உள்ளன. எனவே அந்த பகுதியில் கல்குவாரி நடத்த அனுமதி வழங்கப்பட்ட போதே அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இதுதொடர்பாக அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் 2 முறை மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து மனு கொடுத்துள்ளனர். மேலும் விவசாய நிலத்தில் கல்குவாரி நடத்த தடை விதிக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டில் கடந்த 2.3.2019 அன்று மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த நிலையில் தனபால் கல்குவாரி அமைந்துள்ள இடத்தில் முன்பு ஒரு வண்டிபாதை இருந்ததாகவும், அந்த பாதையை அளந்து கொடுக்குமாறும் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு வண்டிபாதையை அளந்து அறிக்கை அளிக்குமாறு வருவாய்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.

இந்த நிலையில் நேற்று காலை அச்சம்பட்டி பிரதான சாலையை ஒட்டியுள்ள விவசாய நிலத்தை அளப்பதற்காக, சங்கரன்கோவில் தாசில்தார் பாலசுப்பிரமணியன், துணை தாசில்தார் பரமசிவன், வட்ட சர்வேயர் அலமேலுமங்கை மற்றும் போலீசார் அங்கு சென்றனர். இதனை அறிந்த அப்பகுதி விவசாயிகள் கல்குவாரி பாதைக்காக தங்களது நிலத்தை அளப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் நிலத்தில் அமர்ந்து போராட்டத்திலும் ஈடுபட்டனர். உடனே போலீசார் 12 பெண்கள் உள்பட 16 பேரை கைது செய்து, வேனில் ஏற்றினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்