ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தீக்குளிக்க முயற்சி செல்லகெரே அருகே சம்பவம்

நிலத்தகராறு தொடர்பாக உறவினர்கள் தொல்லை கொடுத்ததால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் செல்லகெரே அருகே நடந்து உள்ளது.

Update: 2019-06-04 23:02 GMT
சிக்கமகளூரு, 

சித்ரதுர்கா மாவட்டம் செல்லகெரே தாலுகா பொம்மசமுத்திரா கிராமத்தை சேர்ந்தவர் நிங்கப்பா. இவரது மகன் மஞ்சுநாத்.

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நிங்கப்பா இறந்து விட்டார். இதையடுத்து அவரது பெயரில் உள்ள நிலத்தை உறவினர்களான திம்மண்ணா மற்றும் அவரது மகன்கள் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்ததாக தெரிகிறது. இதுகுறித்து மஞ்சுநாத் கேட்டார். இதுதொடர்பாக மஞ்சுநாத்துக்கும், திம்மண்ணா மற்றும் அவரது மகன்கள் இடையே தகராறு இருந்து வந்தது.

தொல்லை கொடுத்தனர்

இந்த நிலையில் தனது தந்தை பெயரில் உள்ள நிலத்தை தனது பெயருக்கு பட்டா மாற்றி தர வேண்டும் என்று மஞ்சுநாத் பொம்மசமுத்திரா கிராம பஞ்சாயத்து செயல் அதிகாரி பிரதீபா, கிராம பஞ்சாயத்து ஊழியர் மஞ்சுநாத் ஆகியோரிடம் கேட்டு உள்ளார். ஆனால் அவர்கள் பட்டா மாற்றி கொடுக்கவில்லை என்று தெரிகிறது.

இதுபற்றி அறிந்த திம்மண்ணா, மற்றும் அவரது மகன்கள் சேர்ந்து மஞ்சுநாத்தை மிரட்டியதோடு அவரது குடும்பத்தினருக்கும் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது.

தீக்குளிக்க முயற்சி

இந்த நிலையில் நேற்று முன்தினம் செல்லகெரே டவுன் நேருநகர் பகுதியில் உள்ள தாசில்தார் அலுவலகத்திற்கு மனைவி ஷில்பா, 3 குழந்தைகளுடன் மஞ்சுநாத் வந்தார்.

இந்த நிலையில் அவர்கள் 5 பேரும் திடீரென உடலில் மண்எண்ணெயை ஊற்றி கொண்டனர். மேலும் தீக்குளிக்கவும் முயன்றனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் அவர்களை மீட்டனர். இதுபற்றி அறிந்த செல்லகெரே டவுன் போலீசார் அங்கு வந்த மஞ்சுநாத்திடம் விசாரித்தனர். அப்போது நிலத்தகராறு தொடர்பாக உறவினர்கள் தொல்லை கொடுத்ததால் மனைவி, குழந்தைகளுடன் தற்கொலைக்கு முயன்றதாக கூறினார். இதையடுத்து அவர்களுக்கு புத்திமதி கூறி போலீசார் அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதுகுறித்து செல்லகெரே டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்