திருவண்ணாமலையில் 8 வழிச்சாலை எதிர்ப்பு கூட்டு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம் ஏராளமான போலீசார் குவிப்பு

திருவண்ணாமலையில் 8 வழிச்சாலை எதிர்ப்பு கூட்டு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

Update: 2019-06-04 22:15 GMT
திருவண்ணாமலை,

சென்னையில் இருந்து சேலத்திற்கு 8 வழிச் சாலை அமைக்க சென்னையில் இருந்து காஞ்சீபுரம், திருவண்ணாமலை, கிரு‌‌ஷ்ணகிரி, தர்மபுரி வழியாக சேலம் வரை திட்டம் தீட்டப்பட்டது. இதையடுத்து இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்றன. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

மேலும் 8 வழிச் சாலை எதிர்ப்பு கூட்டு இயக்கம் தொடங்கப்பட்டு மத்திய மற்றும் மாநில அரசுகளை கண்டித்து போராட்டங்கள் நடைபெற்றது. இதற்கிடையில் இந்த திட்டத்தை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில் மத்திய அரசு சார்பில் 8 வழிச் சாலைக்கு அனுமதி கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இதனை கண்டித்து 8 வழிச்சாலை எதிர்ப்பு கூட்டு இயக்கம் சார்பில் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு 4-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி நேற்று திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு திருவண்ணாமலை டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டனர். இதனால் கலெக்டர் அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது.

காலை 11 மணியளவில் கலெக்டர் அலுவலகம் முன்பு திருவண்ணாமலை 8 வழிச்சாலை எதிர்ப்பு கூட்டு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மேல்முறையீடு செய்து உள்ள மத்திய அரசை கண்டித்து கோ‌‌ஷங்கள் எழுப்பினர்.

இதில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் அபிராமன், அழகேசன். வீரபத்திரன், சிவக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் ஆர்ப்பாட்டம் முடிந்த பின்பு அங்கேயே மதியம் உணவு சாப்பிட்டு விட்டு கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்