டி.கல்லுப்பட்டி ஒன்றிய அலுவலகத்தில் குடிநீர் கேட்டு கிராம மக்கள் தர்ணா

குடிநீர் கேட்டு டி.கல்லுப்பட்டி ஒன்றிய அலுவலகத்தில் கிராம மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-06-03 23:14 GMT
பேரையூர்,

டி.கல்லுப்பட்டியை அடுத்த வி.அம்மாபட்டி மகாத்மா நகரில் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களுக்கு இங்குள்ள ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் சார்பில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு அதன்மூலம் அவர்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. மேலும் வைகை கூட்டுக் குடிநீர் திட்டம் மூலமும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. ஆனால் ஆழ்துளை கிணறுகள் மூலம் வழங்கப்படும் குடிநீர் அப்பகுதி மக்களுக்கு போதுமான அளவில் இல்லை. வைகை கூட்டுக்குடிநீரும் சீராக வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீர் கிடைக்காமல் தவித்து வந்தனர்.

குடிநீர் தட்டுப்பாடு காரணமாக அப்பகுதி மக்கள் அருகில் உள்ள விவசாய தோட்டத்திற்கு சென்று அங்குள்ள கிணற்றில் தண்ணீர் எடுத்து வருகின்றனர். மேலும் காசு கொடுத்து தண்ணீர் வாங்கும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். எனவே குடிநீர் சீராக வழங்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள், டி.கல்லுப்பட்டி ஒன்றிய அலுவலகத்தில் புகார் அளித்தனர். ஆனால் குடிநீர் சீராக வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்தநிலையில் நேற்று வி.அம்மாபட்டி மகாத்மாநகர் பகுதி மக்கள் டி.கல்லுப்பட்டி அலுவலகத்திற்கு காலிகுடங்களுடன் வந்தனர். பின்னர் அவர்கள் குடிநீர் கேட்டு ஒன்றிய அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். குடிநீர் தட்டுப்பாட்டை உடனடியாக போக்க வேண்டும், மின்மோட்டார் மூலம் குடிநீர் திருடப்படுவதை தடுத்து, சீராக குடிநீர் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து ஒன்றிய ஆணையாளர் கலைச்செல்வன், தர்ணாவில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மகாத்மாநகரில் குடிநீர் பற்றாக்குறையை போக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதியளித்தார். இதையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்