தீவுகளை சுற்றி மிதவைகள் அமைக்க எதிர்ப்பு: காதில் பூ சுற்றி வந்து மீனவர்கள் மனு

மன்னார்வளைகுடா கடல் பகுதியில் உள்ள தீவுகளை சுற்றி மிதவைகள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து காதில் பூ சுற்றி வந்து மீனவர்கள் மனு கொடுத்தனர்.

Update: 2019-06-03 23:15 GMT
ராமநாதபுரம்.

மன்னார் வளைகுடா கடல்பகுதியில் அமைந்துள்ள தீவுகளில் முதல்கட்டமாக சூழல் சுற்றுலா திட்டத்தினை நிறைவேற்றி சுற்றுலா பயணிகள் தீவுகளை கண்ணாடி இழை படகுகளில் சென்று கண்டுகளிக்க அரசு ஏற்பாடு செய்து அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், 4 தீவுகளை சுற்றிலும் சூழல் சுற்றுலா எல்லை வரையறை செய்யும் வகையில் மிதவைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதனால் மீனவர்களுக்கு பாதிப்பு இல்லை என்று வனத்துறையினர் தெரிவித்துள்ள நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தங்களுக்கு பாதிப்பு இல்லை என்று வனத்துறையினர் காதில் பூசுற்றுவதாக கூறி தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பின் மாவட்ட செயலாளர் கருணாமூர்த்தி தலைமையில் ஏராளமான மீனவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் காதில் பூ சுற்றி வந்தனர்.

இவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:– மன்னார்வளைகுடா பகுதியில் உள்ள குட்டிதீவுகளில் ஆண்டாண்டு காலமாக மீனவர்கள் தங்கி மீன்பிடி தொழில் உள்ளிட்டவைகளை மேற்கொண்டு வந்தனர். கடந்த 1982–ம் ஆண்டு தேசிய கடல்சார் பூங்காவாக அறிவிப்பு செய்து வனத்துறை வசம் தீவுகளை ஒப்படைத்தது முதல் வனத்துறையினர் மீனவர்களை துன்புறுத்தி வருகின்றனர். மீனவர்கள் வாழ்வாதாரம் முற்றிலும் இல்லாமல் போய்விட்டது.

இந்நிலையில் தற்போது மேலும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் கடலில் மிதவைகள் போட்டுள்ளனர். சுற்றுலா பயணிகள் சுற்றிப்பார்க்க அனுமதிக்கவும், வனத்துறையினர் ரோந்து சுற்றவும் ஏற்பாடு செய்து வருகின்றனர். இதனால் மீனவர்கள் தீவு பகுதிகளை நெருங்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒட்டுமொத்த மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

எனவே, உடனடியாக வனத்துறையினர் போட்டுள்ள மிதவைகளை அகற்ற வேண்டும். தீவு பகுதியில் மீனவர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை தொடர அனுமதிக்க வேண்டும். மீனவர்களை சார்ந்துள்ள தீவுகளை பராமரிக்கும் பணியை வனத்துறையிடம் இருந்து மீன்வளத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும். எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வருகிற 10–ந் தேதி கலெக்டர் அலுவலகத்தில் மீனவர்கள் அனைவரும் ஒன்று திரண்டு எங்களின் அடையாள அட்டைகளை ஒப்படைத்துவிட்டு தட்டு ஏந்தி பிச்சைஎடுக்கும் போராட்டம் நடத்த உள்ளோம். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

மேலும் செய்திகள்