கோவில்பட்டியில் பிளம்பர் கொலை வழக்கில் கஞ்சா வியாபாரிகள் கைது பரபரப்பு தகவல்கள்

கோவில்பட்டியில் பிளம்பர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 கஞ்சா வியாபாரிகளை போலீசார் கைது செய்தனர். கஞ்சா விற்பனை குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்ததால் அவரை கொலை செய்ததாக அவர்கள் போலீசாரிடம் தெரிவித்து உள்ளனர்.

Update: 2019-06-02 22:00 GMT
கோவில்பட்டி, 

கோவில்பட்டி அத்தைகொண்டான் ஜேகஜோதி நகரை சேர்ந்தவர் சாலமோன். இவரின் மகன் ஸ்டீபன்ராஜ் (வயது 28). பிளம்பர் வேலை பார்த்து வந்தார். இவருக்கு இந்திராணி என்ற மனைவி உள்ளார். கடந்த மாதம் 29-ந்தேதி ஸ்டீபன்ராஜ், தனது மோட்டார் சைக்கிளில் வீட்டில் இருந்து வெளியே சென்றார். ஆனால் அவர் திரும்பி வரவில்லை. இதனால் உறவினர்கள் கோவில்பட்டி மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.

இந்த நிலையில் 30-ந்தேதி கோவில்பட்டி அருகே உள்ள சாலைபுதூரில் ஒரு தோட்டத்தில் மர்மநபர்களால் அவர் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கோவில்பட்டி மேற்கு போலீசார் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடிக்க 3 போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யப்பன் தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக கோவில்பட்டி இனாம்மணியாச்சியை சேர்ந்த முருகேசன் மகன் மகேஷ்குமார் (28), நாலாட்டின்புத்தூர் கல்யாணமண்டப தெருவை சேர்ந்த பெரியசாமி மகன் மந்திரமூர்த்தி (46), பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்த பெருமாள்சாமி மகன் தாமோதரகண்ணன் (20) ஆகியோரை பிடித்து விசாரித்தனர். அவர்களிடம் பிளம்பர் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர்கள் போலீசாரிடம் கூறியதாவது:- நாங்கள் 3 பேரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தோம். அது குறித்து ஸ்டீபன்ராஜ் போலீசுக்கு தகவல் கொடுத்து வந்தார். இதனால் எங்களுக்கு போலீசார் தொல்லை கொடுத்து வந்தனர். இதனால் ஸ்டீபன்ராஜை கொலை செய்ய திட்டமிட்டோம். சம்பவத்தன்று அவரை செல்போனில் பேசி சாலைபுதூரில் உள்ள தோட்டத்துக்கு தனியாக வரவழைத்தோம். பின்னர் அங்கு வைத்து அரிவாளால் அவரை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி சென்று விட்டோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இதை தொடர்ந்து மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து மகேஷ்குமார் உள்பட 3 பேரையும் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்