விருத்தாசலத்தில் 2 கடைகளின் பூட்டை உடைத்து பணம் திருட்டு

விருத்தாசலத்தில் 2 கடைகளின் பூட்டை உடைத்து பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2019-06-02 23:00 GMT
விருத்தாசலம், 

விருத்தாசலம் பெரியார் நகரை சேர்ந்தவர் மாணிக்கம். இவர் அதே பகுதியில் பால் விற்பனை செய்யும் கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடையின் அருகில் செல்போன் கடை, மளிகை கடை, ஜவுளிக்கடை உள்ளிட்ட பல்வேறு கடைகள் அமைந்துள்ளன. நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும் மாணிக்கம் மற்றும் பிற கடைகளின் உரிமையாளர்கள் கடைகளை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டனர்.

இந்நிலையில் நேற்று காலை மாணிக்கம் வழக்கம்போல் தனது கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது கடையில் வைத்திருந்த ரூ.7 ஆயிரத்தை காணவில்லை.

இதுபற்றி தகவல் அறிந்த விருத்தாசலம் போலீசார் விரைந்து வந்து கடையை பார்வையிட்டு அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் நேற்று முன்தினம் நள்ளிரவு மாணிக்கம் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள், அங்கிருந்த ரூ.7 ஆயிரத்தை திருடியுள்ளனர். பின்னர் மாணிக்கம் கடையின் அருகில் உள்ள சங்கீதா என்பவருக்கு சொந்தமான ஜவுளிக்கடையில் ரூ.15 ஆயிரம் மற்றும் பட்டு சேலைகளை திருடியுள்ளனர்.

அதனை தொடர்ந்து அதே பகுதியில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் விற்பனை செய்யும் கடை, செல்போன் கடை, மளிகை கடைகளின் பூட்டையும் மர்மநபர்கள் உடைத்து திருட முயற்சி செய்துள்ளனர். ஆனால் அந்த கடைகளின் பூட்டுகளை உடைக்க முடியாததால் மேற்கொண்டு திருடாமல் அங்கிருந்து தப்பி சென்றது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து, திருட்டு நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து, மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பெரியார் நகர் அருகே தான் விருத்தாசலம் போலீஸ் நிலையம், அனைத்து மகளிர் போலீஸ் நிலையம், உதவி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் ஆகியவை அமைந்துள்ளன. போலீசாரும் அப்பகுதியில் அடிக்கடி ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வாறு போலீஸ் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியிலேயே மர்மநபர்கள் கடைகளின் பூட்டை உடைத்து பணத்தை திருடிச்சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்