மராட்டியத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 85.88 சதவீத தேர்ச்சி மாணவர்களை விட மாணவிகளே அதிகம்

மராட்டியத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் 85.88 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்தனர். மாணவர்களை விட மாணவிகளே அதிக தேர்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2019-05-28 23:00 GMT
மும்பை, 

மராட்டியத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் 85.88 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்தனர். மாணவர்களை விட மாணவிகளே அதிக தேர்ச்சி அடைந்துள்ளனர்.

12-ம் வகுப்பு தேர்வு முடிவு

மராட்டியம் முழுவதும் எச்.எஸ்.சி. எனப்படும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி நடந்தது.

இந்த தேர்வினை மாநிலம் முழுவதும் 14 லட்சத்து 21 ஆயிரத்து 936 பேர் எழுதினர். மும்பை கல்வி மண்டலத்தை பொறுத்தவரை 3 லட்சத்து 16 ஆயிரத்து 105 பேர் எழுதினர். இந்தநிலையில் நேற்று மதியம் 1 மணியளவில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

இதில் தேர்வு எழுதிய மொத்த மாணவ, மாணவிகளில் 12 லட்சத்து 21 ஆயிரத்து 159 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதம் 85.88 சதவீதம் ஆகும்.

இது கடந்த ஆண்டை விட தேர்ச்சி விகிதம் 2.53 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 88.41 சதவீதமாக இருந்தது.

தேர்ச்சி பெற்றவர்களில் 6 லட்சத்து 52 ஆயிரத்து 379 பேர் மாணவர்கள். 5 லட்சத்து 68 ஆயிரத்து 780 பேர் மாணவிகள். மாணவர்கள் 85.23 சதவீதமும், மாணவிகள் 92.36 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

சிறப்பு தேர்ச்சி

கிரேடு வாரியாக பார்த்தால் 1 லட்சத்து 2 ஆயிரத்து 552 பேர் சிறப்பு தேர்ச்சி (டிஸ்டிங்சன்) பெற்று உள்ளனர். அடுத்தபடியாக முதல் கிரேடு பெற்று 4 லட்சத்து 64 ஆயிரத்து 47 பேரும், 2-வது கிரேடு பெற்று 6 லட்சத்து 3 ஆயிரத்து 119 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 51 ஆயிரத்து 441 மாணவர்கள் குறைந்தபட்ச மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கொங்கன் மண்டலத்தில் அதிகபட்சமாக 93.23 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மண்டலம் வாரியாக மும்பை-83.85, புனே- 87.88, நாக்பூர்- 82.51, அவுரங்காபாத்- 87.29, கோலாப்பூர்- 87.12, அமராவதி- 87.55, நாசிக்- 84.77, லாத்தூர்- 86.08 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மும்பையில்...

மும்பையை பொறுத்தவரை தேர்வு எழுதிய மொத்த மாணவர்களில் 2 லட்சத்து 65 ஆயிரத்து 40 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்கள் 80.10 சதவீதமும், மாணவிகள் 88.04 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மும்பையில் கிரேடு வாரியாக டிஸ்டிங்ஷனில் 34 ஆயிரத்து 543 மாணவர்களும், முதல் கிரேடு பெற்று 83 ஆயிரத்து 588 பேரும், 2-வது கிரேடில் 1 லட்சத்து 27 ஆயிரத்து 66 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 19 ஆயிரத்து 843 மாணவர்கள் குறைந்தபட்ச மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளனர்.

மாநிலத்தில் மொத்தம் 67 ஆயிரத்து 901 தனித்தேர்வர்கள் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி இருந்தனர். இவர்களில் 18 ஆயிரத்து 31 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இதன் தேர்ச்சி விகிதம் 26.55 சதவீதம் ஆகும்.

மேலும் செய்திகள்