உக்கடம் சாரமேடு பகுதியில், 20 ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றம் - மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி

கோவை உக்கடம் சாரமேடு பகுதியில் 20 ஆக்கிரமிப்பு வீடுகளை இடித்து அகற்றி மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.

Update: 2019-05-17 22:30 GMT
கோவை,

கோவை உக்கடம் ஆத்துப்பாலத்தை ஒட்டிய பகுதியில் சாரமேட்டில் இருந்து நஞ்சுண்டாபுரம் செல்லும் ரோடு உள்ளது. 5 கி.மீ. தூரம் கொண்ட இந்த ரோட்டின் இருபுறத்தில் ஏராளமான ஆக்கிரமிப்புகள் உள்ளன. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்தனர். எனவே இந்த ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று மாநகராட்சிக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து மாநகராட்சி தனி அதிகாரி ஷ்ரவன் குமார் ஜடாவத் உத்தரவின்பேரில் நகரமைப்பு அதிகாரி ரவிச்சந்திரன் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அதில் இந்த ரோடு 1 கி.மீ. தூரம் தெற்கு மண்டலத்துக்கும், 4 கி.மீ. தூரம் கிழக்கு மண்டலத்தையும் சேர்ந்தது என்றும், 1 கி.மீ. தூரத்தில் மட்டும் 20 வீடுகள் ஆக்கிரமிப்பில் இருப்பதையும் கண்டறிந்தனர்.

உடனே ஆக்கிரமிப்பு பகுதியில் இருப்பவர்களுக்கு குடிசை மாற்று வாரியம் சார்பில் மாற்று வீடுகள் வழங்கப்பட்டன. அத்துடன் அங்கு ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை காலி செய்யவும் உத்தரவிடப்பட்டது. அவர்கள் அந்த வீடுகளை காலி செய்ததால் நேற்று அவற்றை இடித்து அகற்றும் பணி நடந்தது.

இதற்காக நேற்று காலையில் மாநகராட்சி அதிகாரிகள் பொக்லைன் எந்திரங்களுடன் அங்கு சென்றனர். அத்துடன் அங்கு பாதுகாப்புக்காக போலீசாரும் குவிக்கப்பட்டனர். முதலில் அந்த வீடுகளுக்கு வழங்கப்பட்ட மின் இணைப்புகளை ஊழியர்கள் துண்டித்தனர். அதன் பின்னர் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் இடித்து அகற்றப்பட்டன. இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

கோவை சாரமேடு பகுதி-நஞ்சுண்டாபுரம் ரோட்டில் 1 கி.மீ. தூரத்துக்கு மட்டும் தற்போது ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு உள்ளன. மீதமுள்ள 4 கி.மீ. தூரம் உள்ள பகுதியில் 500 வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டு உள்ளன. அந்த வீடுகளில் உள்ளவர்களுக்கு குடிசை மாற்று வாரியம் சார்பில் மாற்று இடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு மாற்று இடம் வழங்கியதும் மீதமுள்ள 500 வீடுகளும் இடித்து அகற்றப்படும். மேலும் இந்த பகுதியில் நீர்வழிப்பாதையில் ஆக்கிரமிப்பு உள்ளதாக புகார் வந்துள்ளது. அது தொடர்பாகவும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்