கயத்தாறு அருகே கார்கள் மோதல்; மளிகைக்கடைக்காரர் சாவு மனைவி உள்பட 4 பேர் படுகாயம்

கயத்தாறு அருகே கார்கள் மோதிக் கொண்ட விபத்தில் மளிகைக்கடைக்காரர் பரிதாபமாக இறந்தார். அவருடைய மனைவி உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2019-05-12 22:00 GMT
கயத்தாறு, 

கயத்தாறு அருகே கார்கள் மோதிக் கொண்ட விபத்தில் மளிகைக்கடைக்காரர் பரிதாபமாக இறந்தார். அவருடைய மனைவி உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

சுற்றுலா

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள தளவாய்புரத்தை சேர்ந்தவர் பாலன் (வயது 55). இவர் அந்த பகுதியில் மளிகைக்கடை நடத்தி வந்தார். இவருடைய மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு சிவராஜ் (22) என்ற மகனும், சித்ரா என்ற மகளும் உள்ளனர். சிவராஜ் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். தற்போது விடுமுறைக்காக ஊருக்கு வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சிவராஜ் புதிய கார் ஒன்று வாங்கினார். அந்த காரில் கன்னியாகுமரிக்கு சுற்றுலா செல்ல பாலன் மற்றும் அவருடைய உறவினர்கள் முடிவு செய்தனர்.

அதன்படி நேற்று காலை புதிய காரில் சிவராஜ், பாலன், ராஜேஸ்வரி, சித்ரா, உறவினர் சரோஜா ஆகிய 5 பேர் சென்றனர். காரை சிவராஜ் ஓட்டினார். மற்றொரு காரில் பாலன் உறவினர்கள் பாலமுருகன் உள்பட 5 பேர் சென்றனர். காரை பாலமுருகன் ஓட்டினார்.

கார்கள் மோதல்

2 கார்களும் கயத்தாறு அருகே நாற்கர சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது பாலமுருகன் ஓட்டி சென்ற கார் முன்னால் சென்று கொண்டிருந்தது. அந்த காரை சிவராஜ் முந்தி செல்ல முயன்றார். அப்போது அந்த பகுதியில் சேலத்தை சேர்ந்த சக்திவேல் (23) என்பவர் ஓட்டி வந்த காரும், சிவராஜ் ஓட்டி வந்த காரும் எதிர்பாராதவிதமாக மோதிக் கொண்டன. இதில் காரில் இருந்த பாலன், சிவராஜ் உள்பட 5 பேரும் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர்.

உடனே அருகில் இருந்தவர்கள் 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு பாலனை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மற்ற 4 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தில் மற்றொரு காரில் வந்த சக்திவேல் காயமின்றி தப்பினார்.

இதுகுறித்து கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்