மக்கள் விரோத அரசுகளை அகற்ற ஓட்டப்பிடாரம் தொகுதியில் தி.மு.க. வெற்றிக்கு அயராது உழைக்க வேண்டும் - தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் சஞ்சய் தத் பேச்சு

மக்கள் விரோத அரசுகளை அகற்ற ஓட்டப்பிடாரம் தொகுதியில் தி.மு.க. வெற்றிக்கு அயராது உழைக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் சஞ்சய்தத் கூறினார்.

Update: 2019-04-28 22:45 GMT
தூத்துக்குடி, 

தூத்துக்குடி தாளமுத்துநகரில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று காலை நடந்தது. வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். மாநில காங்கிரஸ் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார், தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., வேட்பாளர் சண்முகையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக தமிழக காங்கிரஸ் பொறுப்பாளரும், அகில இந்திய காங்கிரஸ் கட்சி செயலாளருமான சஞ்சய் தத் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

உங்களுடைய கடினமான உழைப்பின் காரணமாக ராகுல்காந்தி பிரதமராக வருவதற்கு வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. அடுத்த இலக்காக ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் சண்முகையாவை வெற்றி பெறச் செய்வதன் மூலம் தமிழகத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்க கூடிய கடமையை செய்ய வேண்டும்.

கடந்த 5 ஆண்டுகளாக இந்தியா முழுவதும் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர். அத்தியாவசிய பொருட்கள், பெட்ரோல், உணவு பொருட்கள் விலை அதிகரித்து உள்ளது. இந்த மக்கள் விரோத அரசுகளான மத்திய, மாநில அரசுகளை விரட்டுவதற்கு இந்த தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் வெற்றிக்கு அயராது உழைக்க வேண்டும்.

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மக்களுக்கு பல்வேறு வளர்ச்சி பணிகளை தருவேன் என்று வாக்குறுதி தந்தார். அதனால் மக்கள் வாக்குகளை தந்தார்கள். ஆனால் தற்போது எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஜெயலலிதாவை புறந்தள்ளிவிட்டு மோடி சொல்வதை கேட்டு செயல்படும் அரசாக உள்ளனர். அவர்கள் பா.ஜனதாவின் மக்கள் விரோத நடவடிக்கைகளை ஆதரித்து நிற்கின்றனர். எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அரசின் சாதனைகளை கூறி வாக்கு சேகரிக்க வேண்டும். ஆனால் அவர்கள் இந்த சமூகத்திலும், அரசியலிலும் சம்பந்தமில்லாத பல விஷயங்களை கூறி வாக்குகளை கேட்கும் பரிதாப நிலையை மக்கள் பார்த்து வருகின்றனர். காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி லட்சியம், கொள்கையின் அடிப்படையில் மக்களுக்காக அமைக்கப்பட்ட பலமான கூட்டணி ஆகும்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை அகற்ற மக்கள் போராடினர். அப்போது மத்திய பா.ஜனதா அரசும், தமிழகத்தில் உள்ள அ.தி.மு.க. அரசும் போராடிய மக்களை சுட்டு வீழ்த்தியது. அதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், வருகிற இடைத்தேர்தலில் அனைவரும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். தமிழக அரசு எந்தவித வளர்ச்சியும் செய்யாத நிலையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து விடலாம் என்ற எண்ணத்தில் உள்ளனர். அவர்கள் பணம் கொடுத்தால் வாங்கி கொண்டு உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும். வாக்காளர்கள் சுயமரியாதை உள்ளவர்கள். மத்திய, மாநில அரசுகள் செய்கிற அநீதியை தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்க்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் டேனியல்ராஜ், சுடலையாண்டி, மாநில காங்கிரஸ் துணை தலைவர் ஏ.பி.சி.வீ.சண்முகம், மாநில இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஊர்வசி அமிர்தராஜ், மாவட்ட தலைவர்கள் ஸ்ரீராம், முரளிதரன், முன்னாள் மாவட்ட தலைவர் அருள், தெற்கு மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து தி.மு.க. வேட்பாளர் சண்முகையா நேற்று மாலையில் தூத்துக்குடி ஆரோக்கியபுரம், சவேரியார்புரம், தாளமுத்துநகர், மேலஅழகாபுரி, மாப்பிள்ளையூரணி உள்ளிட்ட பகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். பிரசாரத்தை நெல்லை மத்திய மாவட்ட செயலாளர் அப்துல்வகாப் தொடங்கி வைத்தார். இதில் நெல்லை மேற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாபன், லட்சுமணன் எம்.எல்.ஏ, ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் ராஜேந்திரன், சமத்துவ மக்கள் கழகம் மாவட்ட செயலாளர் அற்புதராஜ், தாளமுத்துநகர் பகுதி செயலாளர் சரவணக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்