சி.பி.எஸ். வசதியுடன் ‘வெஸ்பா இஸட் .எக்ஸ். 125’

பிரீமியம் ஸ்கூட்டர்களில் முதலிடத்தில் இருப்பது பியாஜியோ நிறுவனத்தின் வெஸ்பா ஸ்கூட்டர்கள்தான்.

Update: 2019-04-17 11:56 GMT
பியாஜியோ நிறுவனத் தயாரிப்புகள் மற்ற ஸ்கூட்டர்களைக் காட்டிலும் விலை அதிகமாகத்தான் இருக்கும். ஆனாலும் இதன் செயல்பாடுகள் சிறப்பாக இருப்பதால் இதை விரும்பி வாங்குவோர் அதிகம். அழகிய தோற்றம், குறைவான எடை, மிகச் சிறந்த பிக்அப் ஆகியன இதை பலரும் விரும்பக் காரணமாக உள்ளது. இப்போது இந்நிறுவனம் தனது எல்.எக்ஸ்.125 மாடல் ஸ்கூட்டர்களை சி.பி.எஸ். (கோம்பி பிரேக்கிங் சிஸ்டம்) வசதி கொண்டவையாக அறிமுகம் செய்துள்ளது. இதனால் இந்த மாடலுக்கு இஸட்.எக்ஸ்.125 என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.78,750 ஆகும். இந்நிறுவனத் தயாரிப்புகளில் விலை குறைந்த மாடலும் இதுவே.

இந்நிறுவனத்தின் வி.எக்ஸ்.எல்.125 மாடலில் சி.பி.எஸ். வசதி கொண்டதன் விலை ரூ.92,372 ஆக உள்ளது. இதைவிட சி.பி.எஸ். எஸ்.எக்ஸ். மாடல் விலை ரூ.95,668 ஆகும். பிரீமியம் மாடலான எஸ்.எக்ஸ்.எல்.150 ஏ.பி.எஸ். மாடல் விலை ரூ.1.07 லட்சமாகும்.

இஸட்.எக்ஸ். மாடலில் இரண்டு சக்கரங்களுக்கும் டிரம் பிரேக் வசதி மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. மற்றபடி என்ஜினில் எவ்வித மாறுதலும் செய்யப்படவில்லை. முன்பகுதியில் ஹைட்ராலிக் ஒருபக்க சஸ்பென்ஷனும், பின் பகுதியில் மோனோ ஷாக் அப்சார்பரும் உள்ளது. இது 125 சி.சி. திறனுடன் 3 வால்வுகளைக் கொண்ட ஒற்றை சிலிண்டர் என்ஜினைக் கொண்டது. இது 96 ஹெச்.பி. திறனை 7,250 ஆர்.பி.எம். வேகத்திலும், 9.9 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை 6,250 ஆர்.பி.எம். வேகத்திலும் வெளிப்படுத்தக் கூடியது.

இந்தப் பிரிவில் (125 சி.சி.) சுஸுகி ஆக்ஸஸ் 125 (ரூ.61,858), சுஸுகி பர்க்மான் ஸ்ட்ரீட் (ரூ.70,878), ஹோண்டா கிரேஸியா (ரூ.66,231), டி.வி.எஸ். என்டார்க் 125 (ரூ.65,010) ஆகியவற்றுக்குப் போட்டியாக இதை களமிறக்கியுள்ளது பியாஜியோ.

மேலும் செய்திகள்