நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு புதுவையில் ஆட்சி மாற்றம் வரும் என்பது பகல் கனவு ரங்கசாமி மீது அமைச்சர் நமசிவாயம் தாக்கு

நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு புதுச்சேரியில் ஆட்சி மாற்றம் வரும் என ரங்கசாமி பகல் கனவு காண்கிறார் என்று அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.

Update: 2019-03-30 00:15 GMT

திருபுவனை,

புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் திருபுவனை தொகுதி காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம் மதகடிப்பட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு வட்டார தலைவர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். மாநில தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம், அமைச்சர் கந்தசாமி, தீப்பாய்ந்தான் எம்.எல்.ஏ., காங்கிரஸ் நாடாளுமன்ற வேட்பாளர் வைத்திலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார பொதுச்செயலாளர் தனுசு வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் முதல்–அமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டு பேசியதாவது:–

புதுச்சேரியில் அனைத்து வளர்ச்சி திட்டங்களையும் கவர்னர் கிரண்பெடி தடுத்து நிறுத்தி அரசை முறையாக செயல்பட விடாமல் தொந்தரவு செய்தார். என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி வியாபார அரசியல் செய்கிறார். அவருடைய கட்சியில் அனுபவம் இல்லாத கல்வி வியாபாரியை வேட்பாளராக நிறுத்தியுள்ளார். எதிர்க்கட்சி தலைவராக இருந்தும் புதுச்சேரி வளர்ச்சிக்கும், தனி மாநில அந்தஸ்துக்கும் குரல் கொடுக்காத ரங்கசாமி சுயநலவாதி. அவர் நிறுத்திய வேட்பாளரை படுதோல்வி அடைய செய்யவேண்டும்.

ராகுல்காந்தி ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் மாதம் ரூ.6 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் வழங்குவதாக வாக்குறுதி அளித்துள்ளார். இதன் மூலம் 25 கோடி ஏழைகள் பயன் அடைவார்கள். விவசாய கடன்கள் தள்ளுபடி செய்வது காங்கிரஸ் கட்சியின் நோக்கம். அது நிச்சயம் நிறைவேறும்.

புதுச்சேரி, அனைத்து துறைகளிலும் முன்னேற்ற பாதையில் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். அரசியல் பாரம்பரியம் மிக்க நமது வேட்பாளர் வைத்திலிங்கத்தை 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாநில தலைவர் நமச்சிவாயம் பேசியதாவது:–

புதுச்சேரியில் நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு ஆட்சிமாற்றம் வரும் என்று ரங்கசாமி பகல் கனவு காண்கிறார். பணத்துக்காக அனுபவமே இல்லாத இளைஞரை வேட்பாளராக நிறுத்தியுள்ளார். அவர் அரசியல் தெரியாதவர். கல்வி நிறுவனங்களை வியாபார ரீதியாக காப்பாற்ற எம்.பி. சீட்டை விலைக்கு வாங்க உள்ளார். இதற்கு ரங்கசாமி இடைத்தரகராக செயல்படுகிறார். இது ஜனநாயக அரசியல் படுகொலை.

அனுபவம் இல்லாத ஒரு வேட்பாளரை மக்கள் ஏற்க மாட்டார்கள். நமது வேட்பாளர் வைத்திலிங்கம், புதுச்சேரி அரசியல் வரலாற்றில் பல்வேறு பதவிகளை வகித்த அனுபவம் வாய்ந்தவர். வீடுகள் தோறும் ராகுல் காந்தியின் கொள்கைகளை கொண்டு சென்று, அவருக்கு வாக்கு சேகரிக்கவேண்டும். வைத்திலிங்கத்தை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய அனைவரும் பாடுபடவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில், காங்கிரஸ் நிர்வாகி முத்தழகன், முன்னாள் தலைவர் எத்திராஜிலு நாயுடு, திருபுவனை தொகுதி தி.மு.க. செயலாளர் பார்த்திபன், மாநில தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர் காந்தி, துணை அமைப்பாளர் ஏழுமலை மற்றும் பலர் கலந்துகொண்டனர். முடிவில் வட்டார பொதுச்செயலாளர் எம்.பி.வெங்கடேசன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்