திருச்சி விமான நிலையத்தில் ரூ.17 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல் திருவாரூர் பயணியிடம் விசாரணை

திருச்சி விமான நிலையத்தில் ரூ.17 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக திருவாரூரை சேர்ந்த பயணியிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Update: 2019-03-29 22:30 GMT
திருச்சி,

திருச்சி விமான நிலையத்துக்கு சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, சவுதிஅரேபியா உள்பட பல நாடுகளில் இருந்தும், உள்நாட்டில் பல்வேறு இடங்களில் இருந்தும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் இருந்து தங்கம் மற்றும் வெளிநாட்டு பணம் போன்றவற்றை பயணிகள் கடத்தி வருவதை தடுக்கும் வகையில் விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்தநிலையில் சிங்கப்பூரில் இருந்து நேற்று முன்தினம் இரவு தனியார் விமானம் ஒன்று திருச்சிக்கு வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளிடம் சுங்கத்துறை வான் நுண்ணறிவுபிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரீகுமார் என்ற பயணியிடம் சோதனை நடத்தியபோது, அவர் தனது உடலில் மறைத்து 13,800 அமெரிக்க டாலரும், 9,300 யூரோ மற்றும் 1,150 சிங்கப்பூர் டாலர் ஆகியவற்றை கொண்டு வந்தது தெரியவந்தது. அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட வெளிநாட்டு பணத்தின் மொத்த மதிப்பு ரூ.17 லட்சத்து 17 ஆயிரத்து 500 என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக ஸ்ரீகுமாரிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்