பெரம்பலூரில் நடைபயிற்சி சென்ற மூதாட்டியிடம் 6 பவுன் தாலி சங்கிலி பறிப்பு

பெரம்பலூரில் நடை பயிற்சி சென்ற மூதாட்டியிடம் 6 பவுன் தாலி சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2019-03-23 22:45 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூர்- எளம்பலூர் சாலையில் உள்ள பெரம்பலூர் ரோஸ் நகரை சேர்ந்த கணேசன். இவரது மனைவி அரசு (வயது 60). இவர் தினமும் அப்பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார். வழக்கம் போல் நேற்று காலையும் அவர் நடை பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அவர் உப்போடை பாலம் அருகே சென்று திரும்பும் போது, நோட்டமிட்ட மர்மநபர் அவர் அணிந்து இருந்த 6 பவுன் தாலி சங்கிலியை திடீரென பறிக்க முயன்றார். இதை தடுக்க அரசு போராடினார். ஆனால் அவரால் போராட முடியவில்லை. இதில் தாலி சங்கிலியை பறித்துக்கொண்ட மர்மநபர் உப்போடை பாலத்தில் இருந்து குதித்து தப்பிக்க ஓடினார். அப்போது அரசு அவரை பிடிக்க கூக்குரலிட்டார். இதை கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து மர்ம நபரை பிடிக்க முயற்சித்தனர். அதற்குள் அவர் தயாராக நின்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச்சென்றுவிட்டார். கழுத்தில் காயம் அடைந்த அரசு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் இதுகுறித்து அவர் பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பெரம்பலூரில் நடைபயிற்சி செல்லும் பெண்களிடமும், தனியாக நடந்து செல்லும் பெண்களிடமும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்