ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற டாஸ்மாக் பணம் ரூ.55 லட்சம் பறிமுதல் ஏ.டி.எம்.மில் நிரப்ப கொண்டு சென்ற ரூ.50 லட்சமும் சிக்கியது

சென்னையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில், உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட டாஸ்மாக் பணம் ரூ.55 லட்சமும், ஏ.டி.எம்.மில் நிரப்ப கொண்டு சென்ற ரூ.50 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2019-03-23 23:15 GMT
பெரம்பூர்,

நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பொதுமக்களுக்கு பரிசு பொருட்கள், பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

வடசென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட தண்டையார்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலம் அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரி ஞானச்சந்திரன் தலைமையில் தேர்தல் அதிகாரிகள் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த காரை வழி மறித்து சோதனை செய்தனர். அதில் ரூ.55 லட்சம் இருந்தது. இது தொடர்பாக காரில் வந்த டேவிட்மோகன் மற்றும் விஷ்ணு ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.

அதில் அவர்கள், டாஸ்மாக் கடை ஊழியர்கள் என்பதும், கடையில் மது விற்பனையில் வசூலான அந்த பணத்தை கொண்டு செல்வதாகவும் தெரிவித்தனர். ஆனால் அதற்கு உரிய ஆவணங்கள் எதுவும் அவர்களிடம் இல்லை.

இதையடுத்து ரூ.55 லட்சத்தை பறிமுதல் செய்த தேர்தல் அதிகாரிகள், ஆர்.டி.ஓ. விடம் ஒப்படைத்தனர். அவர்கள், அந்த பணத்தை அரசு கருவூலத்துக்கு அனுப்பி வைத்தார்.

இதேபோல் ஆலந்தூர் மார்க்கெட் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி பாலசுப்பிரமணியம் தலைமையில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது ஏ.டி.எம். மையங்களில் பணம் நிரப்புவதற்காக வந்த தனியார் நிறுவன வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது அதில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது. ஏ.டி.எம். எந்திரங்களில் நிரப்ப கொண்டு செல்வதாக அந்த வாகனத்தில் இருந்த தனியார் நிறுவன ஊழியர்கள் சீத்தாராமன், குமரன் ஆகியோர் தெரிவித்தனர். ஆனால் அதற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த பணத்தை பறிமுதல் செய்து பரங்கிமலை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இது குறித்து இன்ஸ்பெக்டர் வளர்மதி வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.50 லட்சம் ஆலந்தூர் தொகுதி உதவி தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்