கும்மிடிப்பூண்டி அருகே டிரைவரை தாக்கி கார் கடத்திய வழக்கில் 5 பேர் கைது

டிரைவரை தாக்கி கத்திமுனையில் கார் கடத்திய வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2019-03-22 21:30 GMT
கும்மிடிப்பூண்டி,

சென்னை போரூரை அடுத்த ஆலப்பாக்கம் பாரதிதாசன் நகரை சேர்ந்தவர் கோபிநாத் (வயது 30). சொந்தமாக கார் வைத்து உள்ள இவர், அதனை தனியார் கால் டாக்சி நிறுவனத்துடன் இணைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறார். கடந்த 20-ந் தேதி இரவு கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரைப்பேட்டையில் வாடிக்கையாளர்கள் 3 பேரை தனது காரில் ஏற்றிக்கொண்டு சத்யவேடு சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது ஆள்நடமாட்டம் இல்லாத இருட்டு பகுதியில் காரை நிறுத்தும்படி கூறினர். அங்கு ஏற்கனவே 2 பேர் மோட்டார்சைக்கிளுடன் காத்திருந்தனர். பின்னர் 5 பேரும் சேர்ந்து டிரைவர் கோபிநாத்தை தாக்கி, கத்தி முனையில் மிரட்டி அவரது காரை கடத்திச்சென்றனர்.

இது குறித்து கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு கல்பனா தத் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையில் கவரைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்த நிலையில் மேற்கண்ட சம்பவத்தில் ஈடுபட்ட கும்மிடிப்பூண்டி பஜாரை சேர்ந்த கிருஷ்ணா(20), பெரியபாளையம் அடுத்த மஞ்சங்கரணை கிராமத்தை சேர்ந்த தீனா(19), புது கும்மிடிப்பூண்டி பாலீஸ்வரன்கண்டிகையை சேர்ந்த மணிகண்டன் (28), எளாவூரை சேர்ந்த பொட்டு மணி (20) மற்றும் 16 வயது சிறுவன் உள்பட மொத்தம் 5 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். மேற்கண்ட நபர்களில் சிலர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

அவர்களிடம் இருந்து கடத்தப்பட்ட காரையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளையும், கத்தி, அரிவாள் மற்றும் இரும்பு கம்பி போன்ற ஆயுதங்களையும் கவரைப்பேட்டை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேற்கண்ட 5 பேர் இதுபோல வேறு ஏதேனும் சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளனரா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்