மதுரையில் பத்திரிகை அலுவலகம் எரிப்பு,அட்டாக் பாண்டி உள்பட 9 பேருக்கு ஆயுள் தண்டனை

மதுரையில் பத்திரிகை அலுவலகம் எரித்த வழக்கில் அட்டாக் பாண்டி உள்பட 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்ததுடன், இந்த வழக்கில் போலீஸ் துணை சூப்பிரண்டும் குற்றவாளி என மதுரை ஐகோர்ட்டு நேற்று தீர்ப்பளித்தது.

Update: 2019-03-21 22:45 GMT
மதுரை, 

மதுரையில் கடந்த 2007-ம் ஆண்டில் ஒரு பத்திரிகை அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இதில் அந்த அலுவலகம் தீப்பற்றி எரிந்தது. அங்கு வேலை செய்து வந்த ஊழியர்கள் வினோத், கோபிநாத், காவலாளி முத்துராமலிங்கம் ஆகிய 3 பேரும் பலியானார்கள்.

இந்த சம்பவம் குறித்து ஒத்தக்கடை போலீசார் வழக்குபதிவு செய்து அட்டாக் பாண்டி மற்றும் அவருடைய கூட்டாளிகளை கைது செய்தனர். இந்த சம்பவத்தின்போது உரிய நடவடிக்கை எடுக்க தவறியதாக ஊமச்சிகுளம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் என்பவரும் வழக்கில் சேர்க்கப்பட்டார். ஆக மொத்தம் 17 பேர் வழக்கில் சேர்க்கப்பட்டனர். இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிடப்பட்டது.

இந்த வழக்கு மதுரை மாவட்ட முதன்மை கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. கடந்த 2009-ம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து கோர்ட்டு உத்தரவிட்டது.

இதை எதிர்த்து கடந்த 2011-ம் ஆண்டில் சி.பி.ஐ. தரப்பில் மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. பத்திரிகை அலுவலக எரிப்பு சம்பவத்தில் பலியான வினோத் என்பவரின் தாயார் பூங்கொடியும் மதுரை ஐகோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுக்களை நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புகழேந்தி ஆகியோர் விசாரித்தனர். வழக்கு நிலுவையில் இருந்த போது 4-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த சரவணமுத்து இறந்துவிட்டார்.

விசாரணை முடிந்த நிலையில், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்திருந்தனர். இந்தநிலையில் அந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் நேற்று பிறப்பித்தனர். அதில் கூறியிருந்ததாவது:-

ரத்து செய்கிறோம்

9.5.2007 அன்று பகல் 11.45 மணி அளவில் மோட்டார் சைக்கிள்களில் பயங்கர ஆயுதங்கள், பெட்ரோல் குண்டுகளுடன் அட்டாக் பாண்டி மற்றும் அவரது கூட்டாளிகள், பத்திரிகை அலுவலகத்துக்கு வந்துள்ளனர். அங்கு அவர்கள் சட்டத்துக்கு புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அந்த அலுவலகத்தில் பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர். இதில் கோபிநாத், வினோத், முத்துராமலிங்கம் ஆகியோர் பரிதாபமாக இறந்தனர்.

இதன் அடிப்படையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். ஆனால் அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கு போதுமான ஆதாரம் இல்லை எனக்கூறி, மதுரை மாவட்ட முதன்மை கோர்ட்டு தீர்ப்பளித்து, அவர்களை விடுதலை செய்துள்ளது. ஆனால் அட்டாக் பாண்டி மற்றும் கூட்டாளிகள் பயங்கர ஆயுதங்களுடன் வந்து பத்திரிகை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசி, தாக்குதல் நடத்தியதற்கான ஆதாரங்கள் உள்ளன.

எனவே இந்த வழக்கில் கீழ்கோர்ட்டின் தீர்ப்பை ரத்து செய்கிறோம். இந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள அட்டாக் பாண்டி, பிரபு என்ற ஆரோக்கியபிரபு, விஜயபாண்டி, கந்தசாமி, ராமையாபாண்டியன், சுதாகர், திருமுருகன் என்ற காட்டுவாசி முருகன், ரூபன், மாலிக்பாட்ஷா ஆகியோர் குற்றவாளிகள் என அறிவிக்கிறோம்.

அதன்படி, அவர்கள் 9 பேருக்கும் இந்திய தண்டனைச்சட்டம் 449, 463, வெடிமருந்து சட்டப்பிரிவுகள் 4 மற்றும் 5, பொதுச்சொத்துகளுக்கு சேதப்படுத்திய பிரிவு என 5 பிரிவுகளின்படி, ஒவ்வொரு பிரிவுக்கும் தலா 5 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கிறோம். 3 பேர் கொல்லப்பட்டதற்காக, இந்திய தண்டனைச்சட்டப்பிரிவு 302-ன்படி மேற்படி குற்றவாளிகளுக்கு தலா 3 ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது. இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும்.

முக்கிய குற்றவாளியான அட்டாக்பாண்டி, பொட்டுசுரேஷ் கொலை வழக்கில் ஏற்கனவே கைதாகி, பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப் பட்டுள்ளார். எனவே அவரை தவிர மற்றவர்களை உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.

இந்த சம்பவத்தில் தொடர்புடையவர் தப்பிக்க அரசு ஊழியரான துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் துணையாக இருந்துள்ளார். எனவே இந்திய தண்டனைச்சட்டம் 217 மற்றும் 221 ஆகிய பிரிவுகளின்கீழ் குற்றவாளியாகிறார்.

அவர் வருகிற 25-ந்தேதி இந்த கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும். இந்த வழக்கில் அவருக்கு உரிய தண்டனை விவரம் அன்றையதினம் தெரிவிக்கப்படும்.

இந்த சம்பவத்தில் பலியான 3 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீட்டை 3 மாதத்துக்குள் தமிழக அரசு வழங்க வேண்டும்.

இந்த வழக்கில் சேர்க்கப்பட்டு இருந்த திருச்செல்வம், முருகன், ரமேஷ்பாண்டி, வழிவிட்டான், ரமேஷ்குமார் என்ற மெக்கானிக் ரமேஷ், தயாமுத்து ஆகிய 6 பேர் கீழ்கோர்ட்டு தீர்ப்பின்படி விடுதலை செய்யப்படுகிறார்கள்.

இவ்வாறு நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் கூறியுள்ளனர்.

இந்த வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ள துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், சிவகங்கை மாவட்டத்தில் கூடுதல் சூப்பிரண்டாக பணியாற்றி ஓய்வு பெற்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்