தூத்துக்குடியில், வாக்காளர் விழிப்புணர்வு ராட்சத பலூன் பறக்கவிடப்பட்டது - படகில் மின்விளக்கு அலங்காரம்

தூத்துக்குடியில் வாக்காளர் விழிப்புணர்வு ராட்சத பலூன் பறக்கவிடப்பட்டது.

Update: 2019-03-20 23:23 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி ஸ்பிக் நிறுவன பங்களிப்புடன் மாநகராட்சி அலுவலகத்தில் ராட்சத பலூன் பறக்க விடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

கலெக்டரும், தேர்தல் அலுவலருமான சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி விழிப்புணர்வு பலூனை பறக்கவிட்டார். நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் வி.பி.ஜெயசீலன், உதவி கலெக்டர்(பயிற்சி) அனு, தூத்துக்குடி மாநகராட்சி செயற்பொறியாளர் ரூபன் சுரேஷ் பொன்னையா, உதவி ஆணையர் சரவணன், ஸ்பிக் நிறுவனத்தின் மக்கள் தொடர்பு அலுவலர் அமிர்தகவுரி, துணை மேலாளர் தியாகராஜன், உதவி பொறியாளர் பிரின்ஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறும் போது, கடந்த தேர்தலின்போது வாக்குகள் குறைவாக பதிவாகி உள்ள வாக்குச்சாவடி மையங்கள் கணக்கெடுக்கப்பட்டு, அப்பகுதியில் உள்ள வாக்காளர்களுக்கு வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி ராட்சத பலூன் பறக்கவிடப்பட்டு உள்ளது. இந்த பலூனில் உள்ள எல்.இ.டி விளக்குகள் இரவு நேரங்களில் ஒளிருவதால், விழிப்புணர்வு வாசகங்கங்களை எப்போதும் மக்கள் பார்க்க முடியும். இதே போன்று கோவில்பட்டியிலும் பலூன் பறக்க விட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

வாக்காளர்கள் நடைபெற உள்ள தேர்தலில் 100 சதவீதம் வாக்குகளை பதிவு செய்ய வேண்டும். தூத்துக்குடி தொகுதியில் தேர்தல் செலவினங்களை கண்காணிக்க 2 தேர்தல் பார்வையாளர்கள் வந்து உள்ளனர். அவர்கள் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்று கூறினார்.

மேலும் தூத்துக்குடி மீன்வளத்துறை சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திரேஸ்புரம் கடற்கரையில் ஒரு படகில் மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. அதில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதனை திரளான மக்கள் பார்த்து சென்றனர்.

மேலும் செய்திகள்