தர்ணா போராட்டம் முடிந்ததால் இயல்பு நிலை திரும்பியது

முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்களின் தர்ணா போராட்டம் முடிந்ததால் புதுவையில் இயல்பு நிலை திரும்பியது.

Update: 2019-02-20 00:10 GMT
புதுச்சேரி,

புதுவை கவர்னர் கிரண் பெடியை கண்டித்தும் 39 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள், காங்கிரஸ்-தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கவர்னர் மாளிகை முன்பு கடந்த 13-ந்தேதி முதல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து கவர்னர் மாளிகையின் பாதுகாப்புக்காக துணை ராணுவப் படையினரும் குவிக்கப்பட்டனர். பாதுகாப்பு கருதி பாரதி பூங்கா, ரோமண் ரோலண்ட் நூலகம், அருங்காட்சியகம் ஆகியன மூடப்பட்டன. கவர்னர் மாளிகையை சுற்றிய பகுதியிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் செய்திகள் புதுவை வரும் வெளிமாநில சுற்றுலா பயணிகளுக்கு தெரியவந்ததால் அவர்கள் புதுவைக்கு வர தயங்கினார்கள். இதனால் கடந்த வார விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் நடமாட்டம் குறைவாகவே காணப்பட்டது. புதுவையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வந்தது.

இந்தநிலையில் கவர்னர் கிரண்பெடி, முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கவர்னர் மாளிகை பகுதியில் ஈடுபட்டிருந்த துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு பணியில் இருந்து திரும்பப் பெறப்பட்டுள்ளனர்.

கவர்னர் மாளிகையின் பின்புறம் போக்குவரத்தும் அனுமதிக்கப்பட்டுள்ளது. 2 கம்பெனி துணை ராணுவப்படையினர் புதுச்சேரியிலிருந்தும் வெளியேறிவிட்டனர். தற்போது படிப்படியாக இயல்பு நிலை திரும்பி வருகிறது.

மேலும் செய்திகள்