‘டி.டி.வி.தினகரனை தவிர யார் வந்தாலும் கட்சியில் சேர்க்கப்படுவார்கள்’ அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேட்டி

‘டி.டி.வி.தினகரனை தவிர யார் வந்தாலும் கட்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்‘ என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.

Update: 2019-02-10 22:30 GMT
கொடைக்கானல்,

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகர் மற்றும் ஒன்றியப்பகுதிகளில் உள்ள 1,255 பயனாளிகளுக்கு ரூ.80 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அட்டுவம்பட்டியில் உள்ள அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக வளாகத்தில் நடந்தது.

விழாவில் வனத்துறை அமைச்சர் சீனிவாசன் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசினார். இதைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கொடைக்கானலில் உள்ள அனுமதியற்ற கட்டிடங்களை ‘சீல்’ வைக்க மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் முதற்கட்டமாக 49 கட்டிடங்களுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது. மேலும் 1,500 கட்டிடங்களுக்கு ‘சீல்’ வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கொடைக்கானல் பகுதி பொதுமக்கள், முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்களை சந்தித்து கட்டிடங்களை முறைப்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரிசீலித்து பொதுமக்கள் மனம் மகிழக்கூடிய அளவில் நடவடிக்கை எடுப்பார். இதுமட்டுமின்றி ஐகோர்ட்டு உத்தரவுப்படி, மக்கள் பாதிப்படையாத வகையில் நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் தலைமையில் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்தவுடன் உடனடியாக அறிவிக்கப்படும். டி.டி.வி.தினகரனை தவிர வேறு யார் வந்தாலும் கட்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். சசிகலா சிறையில் இருந்து வந்தால் அது குறித்து பார்க்கலாம். சின்னதம்பி யானையை கும்கி ஆக மாற்ற வேண்டும் என ஒருவரும், மாற்ற வேண்டாம் என ஒருவரும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இதுகுறித்து நிபுணர் குழு அமைத்து பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்படும். கஜா புயலால் மலைப்பகுதியில் விழுந்துள்ள மரங்களை கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. அவை விரைவில் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். மன்னவனூர் கிராமத்தில் உள்ள பரப்பாறு அணை சீரமைப்பது குறித்து மாவட்ட கலெக்டரும், மாவட்ட வன அதிகாரியும் பேசி முடிவு எடுப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்