அரும்பாக்கத்தில் பட்டப்பகலில் கல்லூரி வாசலில் ரவுடி வெட்டிக்கொலை கோர்ட்டில் ஆஜராகி விட்டு வந்தபோது சம்பவம்

அரும்பாக்கத்தில் கல்லூரி வாசலில் ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். கோர்ட்டில் ஆஜராகிவிட்டு வந்த அவரை மர்ம கும்பல் பின்தொடர்ந்து வந்து கொலை செய்து விட்டு தப்பிச்சென்று விட்டது.

Update: 2019-01-21 22:30 GMT
பூந்தமல்லி,

சென்னை சூளைமேட்டை சேர்ந்தவர் குமரேசன்(வயது 36). ரவுடியான இவர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. இவர், கஞ்சா விற்பனையும் செய்து வந்தார்.

குமரேசன், நேற்று காலை ஒரு கொலை வழக்கு சம்பந்தமாக பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜராகிவிட்டு தனது கூட்டாளிகளுடன் ஆட்டோவில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். செல்லும் வழியில் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அரும்பாக்கத்தில் ஒரு தனியார் கல்லூரி எதிரே உள்ள ஓட்டலில் சாப்பிடுவதற்காக ஆட்டோவை நிறுத்தி இறங்கினர்.

அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் திடீரென தாங்கள் முதுகில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்தனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குமரேசன் மற்றும் அவரது கூட்டாளிகள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள்.

மர்மநபர்கள் குமரேசனை வெட்டும்போது அரிவாளின் பின்பகுதி அவரது முதுகில் பட்டது. தன்னை காப்பாற்றிக்கொள்வதற்காக குமரேசன் சாலையின் குறுக்கே ஓடி தடுப்பு சுவரை தாண்டிக்குதித்து சாலையின் மறு பகுதிக்கு ஓடினார்.

ஆனால் விடாமல் ஓட ஓட விரட்டிச்சென்ற கும்பல், குமரேசனை சரமாரியாக வெட்டினார்கள். ஒரு கட்டத்தில் ஓட முடியாமல் கல்லூரி வாசலில் விழுந்த குமரேசனின் தலை, கை, கால் உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டி விட்டு அந்த கும்பல் தப்பி சென்றது. இதில் படுகாயம் அடைந்த குமரேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

பட்டப்பகலில் நடந்த கொலை சம்பவத்தை பார்த்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்துவந்த அண்ணா நகர் உதவி கமிஷனர் குணசேகரன், இன்ஸ்பெக்டர்கள் ஜெகதீசன், பெருந்துறை முருகன் ஆகியோர் தலைமையிலான போலீசார் கொலையான குமரேசன் உடலை மீட்டு பிரேத+ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் அந்த கும்பல், குமரேசனை ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

கடந்த 2015-ம் ஆண்டு யுவராஜ் என்பவரை வளசரவாக்கம் வரவழைத்து குமரேசன் மற்றும் அவரது கூட்டாளிகள் கொலை செய்தனர். கடந்த ஆண்டு பள்ளிக்கரணையில் நடந்த கொலை வழக்கிலும் குமரேசன் சம்பந்தப்பட்டு உள்ளார்.

யுவராஜை கொலை செய்த வழக்கில் நேற்று பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜராகி விட்டு வந்த குமரேசனை, அந்த கும்பல் பின்தொடர்ந்து வந்து கொலை செய்து இருப்பது போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.

கஞ்சா விற்பதிலும் கடும் போட்டி நிலவி உள்ளது. எனவே யுவராஜ் உள்பட 2 பேர் கொலைக்கு பழி வாங்கும் நோக்கத்தில் இந்த கொலை நடந்ததா? அல்லது கஞ்சா விற்பனையில் ஏற்பட்ட தகராறு காரணமா? என பல்வேறு கோணங்களில் தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பட்டப்பகலில் கல்லூரி வாசலில் நடந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்