பாரிமுனையில் துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்தவர் கைது கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டது அம்பலம்

சென்னை பாரிமுனையில் துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த வடமாநிலத்தை சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர். அவர் வடமாநில வாலிபர்களை சென்னைக்கு அழைத்து வந்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும் அம்பலமானது.

Update: 2018-12-12 23:00 GMT
பிராட்வே,

சென்னை பாரிமுனை கோட்டை ரெயில் நிலையம் அருகே நேற்று முன்தினம் இரவு பூக்கடை போலீஸ் உதவி கமிஷனர் லட்சுமணன், இன்ஸ்பெக்டர் ரவி, சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் ஆகியோர் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் சென்ற வாலிபர் ஒருவரை சந்தேகத்தின்பேரில் விசாரிக்க போலீசார் அழைத்தனர்.

ஆனால் அந்த நபர் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடினார். அவரை போலீசார் விரட்டிப்பிடித்து விசாரித்தனர். அப்போது முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் அவரை போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த நரேந்திரசிங் (வயது 39) என்பதும், கடந்த 20 ஆண்டுகளாக தங்க சாலை பகுதியில் பை கடை நடத்தி வந்ததும் தெரியவந்தது. மேலும், அவர் இடுப்பில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன.

நரேந்திரசிங் நடத்திய கடையில் போதிய வருமானம் இல்லை. இதனால் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து வாலிபர்களை சென்னைக்கு அழைத்து வந்து சவுகார்பேட்டை, பாரிமுனை பகுதிகளில் பணப்புழக்கம் அதிகம் உள்ள கடைகளில் வேலைக்கு சேர்த்து விட்டார். அவர்கள் மூலம் தகவல்களை சேகரித்து அந்த கடை உரிமையாளரை தாக்கியும், பூட்டை உடைத்தும் கொள்ளையடிக்க சதித்திட்டம் தீட்டி வந்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு யானைக்கவுனி பகுதியில் உள்ள ஒரு கடையில் பூட்டை உடைத்து ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் மற்றும் 1¼ கிலோ வெள்ளிப்பொருட்களை நரேந்திரசிங் மற்றும் அவரது கூட்டாளிகள் கொள்ளையடித்தனர்.

இதில் தனது பங்கு தொகையை பெற்றுக்கொண்டு மத்திய பிரதேச மாநிலம் சென்ற அவர் நண்பர் ஒருவர் உதவியுடன் தற்காப்பு மற்றும் கொள்ளைக்கு பயன்படுத்த ஒரு கைத்துப்பாக்கியை வாங்கிக்கொண்டு மீண்டும் சென்னை வந்தார். பாரிமுனை பகுதியில் உள்ள ஒரு கடையில் கொள்ளையடிக்க நோட்டமிட்டபோது போலீசாரிடம் கையும் களவுமாக சிக்கிக்கொண்டது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் ஆயுத தடுப்பு பிரிவு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து நரேந்திரசிங்கை கைது செய்தனர். பின்னர் அவரை ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்