கோவில்பட்டி–கயத்தாறு தாலுகா அலுவலகம் முன்பு விவசாயிகள் போராட்டம் நோய் பாதிப்புக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை

கோவில்பட்டி–கயத்தாறு தாலுகா அலுவலகங்கள் முன்பு நோயால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கக்கோரி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-12-12 22:00 GMT
கோவில்பட்டி, 

கோவில்பட்டி–கயத்தாறு தாலுகா அலுவலகங்கள் முன்பு நோயால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கக்கோரி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம் 


தூத்துக்குடி மாவட்டத்தில் மானாவாரி நிலங்களில் பயிரிடப்பட்ட மக்காச்சோள பயிர்களை அமெரிக்க நாட்டைச் சேர்ந்த படைப்புழுக்கள் தாக்கியதில் பயிர்கள் சேதம் அடைந்தன. எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், கோவில்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஒன்றிய செயலாளர் மணி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஆறுமுகம், துணை செயலாளர் ராமசுப்பு, மாவட்ட குழு உறுப்பினர்கள் மகாலிங்கம், முத்துமாரியப்பன், ஒன்றிய துணை தலைவர் ராமசுப்பு உள்பட திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் படைப்புழு தாக்குதலால் சேதம் அடைந்த மக்காச்சோள பயிர்களை எடுத்து வந்து கோ‌ஷங்களை எழுப்பினர்.

கயத்தாறு 


இதேபோன்று நோயால் பாதிக்கப்பட்ட மக்காச்சோளம், வெங்காயம் போன்ற பயிர்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரி கயத்தாறு தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் நேற்று முற்றுகையிட்டனர். சங்க மாவட்ட தலைவர் சுப்பையா, வட்டார தலைவர் மாரியப்பன், செயலாளர் துரைராஜ், ஒன்றிய தலைவர் தவமணி, துணை தலைவர் சீனிபாண்டி, கமிட்டி உறுப்பினர்கள் கந்தசாமி, நாராயணசாமி, மாரியப்பன், நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள், தாலுகா அலுவலகத்தில் கோரிக்கை மனு வழங்கி விட்டு, கலைந்து சென்றனர்.


புட்நோட்


கோவில்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு பாதிக்கப்பட்ட பயிர்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை படத்தில் காணலாம்.

மேலும் செய்திகள்